தூத்துக்குடி 1ம் & 2ம் ரயில்வே கேட் போக்குவரத்து நெரிசல்: மேம்பாலம் எப்போது? தேர்தலுக்கு முன் மக்கள் கேள்வி!

தூத்துக்குடி 1ம் & 2ம் ரயில்வே கேட் போக்குவரத்து நெரிசல்: மேம்பாலம் எப்போது? தேர்தலுக்கு முன் மக்கள் கேள்வி!

தூத்துக்குடி 1ம் & 2ம் ரயில்வே கேட் போக்குவரத்து நெரிசல்: நிரந்தர தீர்வு எப்போது?

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 1ம் மற்றும் 2ம் ரயில்வே கேட் பகுதிகளில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருவது பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கையால் இந்த பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது.

மாநகர பகுதியில் மொத்தம் 4 ரயில்வே கேட்கள் உள்ளன. இதில், 1ம் மற்றும் 2ம் கேட்கள் நகரின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ளதால், அவை அடிக்கடி மூடப்படும்போது நகர போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே உள்ள 1ம் கேட் பகுதியில் தினமும் பலமுறை ரயில்கள் மற்றும் எஞ்சின்கள் செல்வதால் கேட் அடைக்கப்படுகிறது. அதேபோல் 2ம் கேட் பகுதியிலும் தற்போது இதே நிலை தொடர்கிறது.

ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 1ம் கேட் சில நேரங்களில் முழுமையாக மூடப்படுவதால், பொதுமக்கள் 2ம் கேட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் காலை பள்ளி நேரம், அலுவலக நேரங்களில் மாணவர்கள், பணியாளர்கள், நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

2ம் ரயில்வே கேட் மற்றும் சிவன் கோவில் சுற்றுவட்டாரங்களில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையாக நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கேட் திறந்த பின்பும் போக்குவரத்து சீராக பல மணி நேரம் ஆகிறது.

இந்த நிலையில், 2ம் கேட் பகுதியில் மேம்பாலம் அல்லது கீழ்பாலம் அமைப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மாநில அரசு மத்திய ரயில்வே துறையுடன் இணைந்து இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த நீண்ட நாள் கோரிக்கைக்கு தெளிவான வாக்குறுதி அளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தூத்துக்குடி மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்பது தற்போது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.