தூத்துக்குடியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்! 3 விசைப்படகுகளில் தீவிர தேடுதல்..!

தூத்துக்குடியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்! 3 விசைப்படகுகளில் தீவிர தேடுதல்..!

தருவைகுளத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடி மீனவர் ஒருவர் கடலில் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை கடலோரக் காவல் படையினர் மற்றும் சக மீனவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணியார் பிச்சை என்பவருக்குச் சொந்தமான செவுள்வலை விசைப்படகில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

படகு கடலில் சென்று கொண்டிருந்தபோது, தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த பனிமயராஜா என்பவரை காணவில்லை என்பதை சக மீனவர்கள் இரவு சுமார் 10.30 மணியளவில் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சம்பவம் குறித்து உடனடியாக விசைப்படகு உரிமையாளருக்கும், கடலோரக் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் மாயமான மீனவர் பனிமயராஜாவை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 3 விசைப்படகுகளில் சென்றுள்ள சக மீனவர்கள் கடலில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடலோரக் காவல் படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயமான சம்பவம் தருவைகுளம் மற்றும் தாளமுத்துநகர் பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாயமான பனிமயராஜா பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.