வங்கிகளில் வாரத்தில் 5 நாட்கள் பணி: தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வங்கிகளில் வாரத்தில் 5 நாட்கள் பணி: தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி என்ற நடைமுறையை உடனடியாக அமல்படுத்தி அறிவிக்கக் கோரி, அகில இந்திய வங்கி பணியாளர் சங்க கூட்டமைப்பான UFBU சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள 381 வங்கி வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு UFBU தூத்துக்குடி வங்கி தொழிற்சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கனரா வங்கி தொழிற்சங்க நிர்வாகி செந்தில்குமரன் வரவேற்புரையாற்றினார்.

இதில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தொழிற்சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், துரைராஜ், மைக்கேல் ஞானராஜ் மற்றும் பாங்க் ஆஃப் பரோடா வங்கி தொழிற்சங்க நிர்வாகி சன்னாசி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

வங்கி ஊழியர்களின் நலன் மற்றும் அதிகரித்து வரும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, வாரத்தில் 5 நாட்கள் பணி முறையை அரசு மற்றும் வங்கி நிர்வாகங்கள் உடனடியாக பிரகடனப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.