போல்டன்புரம் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி அருகே கழிவுநீர்: மாணவர்களுக்கு நோய் தொற்று அபாயம் – மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

போல்டன்புரம் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி அருகே கழிவுநீர்: மாணவர்களுக்கு நோய் தொற்று அபாயம் – மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடி போல்டன்புரத்தில் இயங்கி வரும் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து கழிவுநீர் கொட்டப்படுவதால், விடுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

விடுதி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மாணவர்கள் உணவு கூட உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு, பகல் பாராமல் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால், டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர் சங்கம் கூறியுள்ளது.

விடுதியின் சுவர் அருகே கழிவுநீர் கொட்டப்படுவதால், அது விடுதிக்குள் புகுந்து, மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ள குடிநீர் கிணற்றிலும் கழிவுநீர் கலக்கும் அபாயம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கிணற்று நீரையே மாணவர்கள் குடிநீராகவும், அன்றாட பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதியை ஆய்வு செய்ய வரும் அரசு அலுவலர்களிடம் மாணவர்கள் பலமுறை இதுகுறித்து புகார் தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து விடுதி அருகே கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களும் உடனடியாக தலையிட்டு, மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதுடன், இனிமேல் விடுதி அருகே கழிவுநீர் கொட்டப்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் மாவட்ட தலைவர் மாடசாமி மற்றும் மாவட்ட செயலாளர் ராம் குமார் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.