தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: “குற்றவாளி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ஆட்சியரிடம் வாலிபர் சங்கம் மனு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: “குற்றவாளி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ஆட்சியரிடம் வாலிபர் சங்கம் மனு!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விசாரணைக் குழு பரிந்துரைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு 100 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்றது. இதன் இறுதிக்கட்டமாக, 2018 மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மற்றும் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அன்றைய தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. குழு விரிவான விசாரணை நடத்தி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

இந்த விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்ததாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், 31.08.2026 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த கருத்துகள், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமானதாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இருப்பதாக தங்களுக்கு தெரிகிறது என சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு பரிந்துரைத்த அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநில துணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் நேசமணி, மாவட்ட பொருளாளர் அய்யனார், மாவட்ட துணைத் தலைவர் அழகுமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராம்குமார், குரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.