திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: தனிநபர் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது – ஆட்சியர் அறிவிப்பு!

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: தனிநபர் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது – ஆட்சியர் அறிவிப்பு!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை (நவம்பர் 15) நடைபெறவுள்ள கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, தனிநபர் வாகனங்களுக்கு எவ்வித சிறப்பு அனுமதி அட்டையும் வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டித் திருவிழா கடந்த நவம்பர் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவம்பர் 15) நடைபெற உள்ளது.

இந்த விழாவைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருச்செந்தூர் ஜெ.ஜெ. நகர், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனிநபர் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், நகரில் ஏற்படும் வாகன நெரிசலைத் தவிர்க்க பக்தர்கள் தங்களது சொந்த வாகனங்களில் வருவதை இயன்றவரை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி திருச்செந்தூருக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தனிநபர் வாகனங்களுக்கு 'வாகன அனுமதி அட்டை' கிடையாது!

நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு, தனிநபர் வாகனங்களுக்கென எந்தவொரு சிறப்பு அனுமதி அட்டையும் (Vehicle Pass) வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எனவே, பக்தர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் வெளியிடும் போக்குவரத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, விழா சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.