“உன் வேலையை மட்டும் பார் என்றார்கள்... நான் மேடைக்கு வந்துவிட்டேன்!” – பாடிபில்டிங் போட்டியில் வெற்றிபெற்ற டாக்டர் ஸ்ரீலேகாவின் அதிரடி பேச்சு வைரல்..!

“உன் வேலையை மட்டும் பார் என்றார்கள்... நான் மேடைக்கு வந்துவிட்டேன்!” – பாடிபில்டிங் போட்டியில் வெற்றிபெற்ற  டாக்டர் ஸ்ரீலேகாவின் அதிரடி பேச்சு வைரல்..!

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பாடிபில்டிங் போட்டி நடைபெற்றது.

இளைஞர்கள் போதைப் பழக்கங்களில் இருந்து விலகி, உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக தென்னிந்திய அளவில் இத்தகைய போட்டி நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பாடிபில்டர்கள் கலந்து கொண்டனர். 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்றனர்.

மொத்தம் 15 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சுமார் 200 போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது உடல் கட்டமைப்பு மற்றும் உடற்பயிற்சி திறமையை வெளிப்படுத்தினர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியை World Fitness Federation தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரூபர்ட் ராஜா தலைமையில் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார்.

பெண்கள் பிரிவில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த தாடை மற்றும் பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீலேகா கூறுகையில்:

“நான் 2021-ம் ஆண்டு முதல் வெயிட் லிஃப்டிங் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் உடல் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்காக மட்டுமே உடற்பயிற்சியை தொடங்கினேன். பின்னர் இதில் ஆர்வம் ஏற்பட்டதால் பாடிபில்டிங் மேடைக்கு வந்து, ஸ்போர்ட்ஸ் மாடலாக பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

பெண்களுக்கு ஸ்ட்ரெந்த் ட்ரைனிங் மிகவும் முக்கியமானது. எடை தூக்குவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருப்பதற்கும் இது உதவும். குறிப்பாக 30 வயதுக்குப் பிறகு பெண்கள் தங்களது உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பாடிபில்டிங் போன்ற துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை பல பெண்களுக்கு இருக்கும். ஆனால் குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் விமர்சனங்களால் பலர் பின்வாங்குகின்றனர்.

ஒரு விளையாட்டு வீராங்கனையின் உடையை வைத்து அவரை மதிப்பிடக் கூடாது. அவர் எவ்வளவு கடினமாக உழைத்துள்ளார், எவ்வளவு கட்டுப்பாட்டுடன் டயட்டை பின்பற்றுகிறார், இந்த உடல் கட்டமைப்பை பெற எத்தனை ஆண்டுகள் உழைத்துள்ளார் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

‘உனக்கு எதற்கு இந்த சாதனை? உன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக்கொள்’ என்று விமர்சிப்பவர்கள் இருப்பார்கள். ஆனால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி செல்ல முழு உரிமை உள்ளது.

விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் சிரித்துக்கொண்டே உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள். ஒரு முறையாவது உங்கள் இலக்கை அடைந்து சாதித்துக் காட்டுங்கள். பெண்களை ஊக்கப்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன்” என்றார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த தென்னிந்திய அளவிலான போட்டி, இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

டாக்டர் ஶ்ரீலேகா இதுவரை நான்கு போட்டிகளில் கலந்து கொண்டு 2 தங்க மேடல்களை வாங்கியுள்ளார்.