காடல்குடி அருகே சோகம்: குடும்பத் தகராறால் மனமுடைந்த 40 வயது வாலிபர் தூக்கிட்டு உயிரிழப்பு – போலீசார் விசாரணை

காடல்குடி அருகே சோகம்: குடும்பத் தகராறால் மனமுடைந்த 40 வயது வாலிபர் தூக்கிட்டு உயிரிழப்பு – போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்ததாகக் கூறப்படும் 40 வயது வாலிபர் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி அருகே உள்ள P. ஜெகவீரபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் விஜயகாந்த் (40). இவரது மனைவி ராஜேஸ்வரி (34).

கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தகராறு நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் ஜெகவீரபுரம் கிராமத்திற்கு வடக்கே உள்ள காட்டுப்பகுதியில், கருவேல மரத்தில் விஜயகாந்த் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காடல்குடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், விஜயகாந்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விஜயகாந்தின் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் காடல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத் தகராறே சம்பவத்திற்கான காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பப் பிரச்சினையின் பின்னணியில் 40 வயது வாலிபர் உயிரிழந்த சம்பவம் ஜெகவீரபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.