தூத்துக்குடி கோர விபத்து: 2 பெண்கள் பலி; மோதிவிட்டு தப்பிய கார் ஓட்டுநர் கைது

தூத்துக்குடி கோர விபத்து: 2 பெண்கள் பலி; மோதிவிட்டு தப்பிய கார் ஓட்டுநர் கைது

ஸ்கூட்டர் மீது கார் மோதிய கோர விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி சத்யா (40), அதே பகுதியைச் சேர்ந்த தேவசிகாமணியின் மனைவி அமுதா (45) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடிக்கு வந்துவிட்டு நாசரேத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அமுதா இருசக்கர வாகனத்தை ஓட்டிய நிலையில், சத்யா பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.

தூத்துக்குடி அருகே பாளையங்கோட்டை சாலையில் உள்ள வாகைகுளத்திலிருந்து முடிவைத்தானந்தல் சாலைக்கு திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சத்யா மற்றும் அமுதா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் அங்கிருந்து சென்றதாக கூறப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நாசரேத் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் நாசரேத் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.