தேசிய அளவிலான ஜூனியர் ஐடியாதான் போட்டி: தூத்துக்குடி மாணவர்கள் முதலிடம்... SPIC நகர் பள்ளி மாணவர்களின் “SALT X BOT” திட்டத்திற்கு முதல் பரிசு..!

தேசிய அளவிலான ஜூனியர் ஐடியாதான் போட்டி: தூத்துக்குடி மாணவர்கள் முதலிடம்... SPIC நகர் பள்ளி மாணவர்களின் “SALT X BOT” திட்டத்திற்கு முதல் பரிசு..!

தூத்துக்குடி:

ACIC – கலசலிங்கம் புதுமை அறக்கட்டளை சார்பில், கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஜூனியர் ஐடியாதான் 2026 தேசிய அளவிலான போட்டியில், தூத்துக்குடி SPIC நகர் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர்கள் ஜெருஷ் ஜி. பால் மற்றும் கைலேஷ் குமரன் ஆகியோர் உருவாக்கிய “SALT X BOT” திட்டம் தேசிய அளவில் முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளது.

27.08.2026 அன்று நடைபெற்ற இப்போட்டியில், இந்தியா முழுவதும் இருந்து 450-க்கும் மேற்பட்ட திட்டங்கள் விண்ணப்பிக்கப்பட்டன. அவற்றில் இருந்து 60-க்கும் மேற்பட்ட திட்டங்கள் முன்இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. மாணவர்கள் தங்களது புதுமையான திட்டங்களை ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் சமர்ப்பித்து விளக்கினர்.

தேசிய அளவிலான நேரடி இறுதிப் போட்டியில், SPIC நகர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்களது “SALT X BOT” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி விளக்கி, நடுவர்களின் பாராட்டைப் பெற்று முதல் பரிசை வென்றனர்.

உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவும் புதுமையான ரோவர்

SALT X BOT என்பது உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள புதுமையான ரோவர் ஆகும். இது உப்பு அறுவடை செய்வதற்கும், உப்பளத்தைச் சீரமைத்து நேர்த்தியாக அமைப்பதற்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உப்பளத் தொழிலாளர்களின் உடல் உழைப்பைக் குறைத்து, பணித்திறனை அதிகரித்து, அன்றாடப் பணிகளில் அவர்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இம்மாணவர்கள் ஷெல் நெக்ஸ்ப்ளோரர்ஸ் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆவர். இப்பயிற்சியின் மூலம் பிரச்சினைகளை அடையாளம் காணுதல், காரணங்களைப் பகுப்பாய்வு செய்தல், பல்வேறு தீர்வுகளை உருவாக்குதல் மற்றும் சிறந்த தீர்வைத் தேர்வு செய்தல் போன்ற புதுமையான சிந்தனை மற்றும் பிரச்சினைத் தீர்க்கும் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொண்டனர்.

இந்தத் திறன்களைப் பயன்படுத்தி, தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள உப்பளத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்களை அடையாளம் கண்டு, அதற்கான தொழில்நுட்பத் தீர்வாக “SALT X BOT” திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

காப்புரிமைக்கு பரிந்துரை

மேலும், அடல் இன்னோவேஷன் மிஷன் (AIM) மூலம் “SALT X BOT” திட்டம் காப்புரிமைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய அளவிலான வெற்றிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. எல். பாபு ராதாகிருஷ்ணன், பள்ளி நிர்வாகம், ATL ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஜித்தாமோல், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஷெல் நெக்ஸ்ப்ளோரர்ஸ் குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

தேசிய அளவில் முதல் பரிசு பெற்றுள்ள இந்தச் சாதனை, SPIC நகர் மேல்நிலைப்பள்ளிக்கும், தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.