இறகுப்பந்து விளையாட்டரங்கம், உடற்பயிற்சி கூடம் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்!
தூத்துக்குடியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், இன்று மாநகராட்சிக்குட்பட்ட கிரேட் காட்டன், அசோக் நகர், லையன்ஸ் டவுண் புல்தோட்டம் மற்றும் நந்தகோபாலபுரம் ஆகிய 4 இடங்களில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் ஆகியோர் முன்னிலையில், விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இதனை தடுக்க அண்டை நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, கிழக்கு மண்டலத் தலைவர் கலைச்செல்வி, மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்குமார், ரிக்டா, மாநகரப் பொறியாளர் பாஸ்கர், துணை மாநகரப் பொறியாளர் சரவணன், அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பலர் கலந்துகொண்டனர்.