தூத்துக்குடி மாவட்டத்தில் தனிப்படைகள் கலைப்பு: போலீசார் சீருடையில் பணியாற்ற உத்தரவு!

டிஜிபி உத்தரவு எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தனிப்படைகள் கலைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டதால் மரணம் அடைந்தார்.
இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோயில் ஊழியர் அஜித்குமாரை, சாதாரண உடையில் வந்த தனிப்படை போலீசார் அழைத்துசென்று விசாரணை நடத்தியது தெரியவந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் காவல்துறையில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி., வசம் தனிப்படைகள் கலைக்கப்பட்டுள்ளது. போலீசார் பணி நேரத்தில் கட்டாயம் சீருடையில் இருக்க வேண்டும். சீருடை அணியாமல் பணியாற்றும் தனிப்பிரிவு போலீசார், கியூ பிரிவு, மற்றும் உளவுத்துறை காவலர்கள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.