மனைவிக்கு உடல்நலமில்லை; மருத்துவ செலவுக்கு தேவை 'ஒரு மாதத்தில் திருப்பி தரேன்.'கடிதம் எழுதிவைத்து கொள்ளை: தூத்துக்குடியில் சுவாரசியம்
ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த கொள்ளையன், 'மனைவிக்கு உடல்நலமில்லை, மருத்துவ செலவுக்காக கொள்ளையடித்தேன், ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுவேன்' என கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளான்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் சித்திரைசெல்வின் (79). இவரும், இவரது மனைவியும் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களது 3 மகள்கள், ஒரு மகனுக்கு திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.
சென்னையில் ஒரு வங்கியில் வேலை பார்க்கும் மகனுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால், கடந்த 17ம் தேதி சித்திரை செல்வின் மனைவியுடன் சென்னை சென்றார். அப்போது வீட்டை பராமரிக்க செல்வி என்ற பெண்ணிடம் சாவியை கொடுத்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய வந்த செல்வி, கதவுகள் உடைந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து மெஞ்ஞானபுரம் போலீசார், சித்திரை செல்வினை செல்போனில் தொடர்பு கொண்டு பீரோ லாக்கரில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் பண விவரங்களை கேட்டனர்.
இதில் ரூ.60 ஆயிரம், ஒன்றரை பவுன் எடை கொண்ட 2 ஜோடி கம்மல். ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. கொள்ளையன் பச்சை நிற மை பேனாவால் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ''என்னை மன்னித்து விடுங்கள்; என்னுடைய மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. மருத்துவ செலவுகளுக்காக கொள்ளையடித்தேன். ஒரு மாதத்தில் திருப்பித் தந்து விடுவேன்.'' என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.