தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை! 4 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை! 4 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடி: தூத்துக்குடி கந்தன் காலனி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி கந்தன் காலனி மூன்றாவது தெரு மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல். இவரது மனைவி சசிகலா. இந்தத் தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் நிரஞ்சன் குமார் திருமணமாகி அருகிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மகள் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். சித்திரவேல் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

இதனால் சசிகலா வீட்டில் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று பிற்பகல் அவர் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு புகுந்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த கழுத்து மற்றும் காதில் கிடந்த நகைகளைப் பறிக்க முயன்றுள்ளனர்.

அப்போது சசிகலா அவர்களைத் தடுக்கப் போராடியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சசிகலாவின் தலை மற்றும் தோள்பட்டையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சசிகலா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார்.

இதையடுத்து, அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்!

சசிகலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர். பின்னர் அவரது மகன் நிரஞ்சன் குமாருக்குச் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக வீட்டிற்கு வந்த நிரஞ்சன் குமார், மாடியில் தனது தாய் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவ இடத்தில் எஸ்.பி. நேரில் விசாரணை!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்துறையினர், கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் தாமிராவும் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, கொலையில் தொடர்புடைய மர்ம நபர்களைக் கண்டறிய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட தனது தாயின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ளதாக மகன் நிரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் நடைபெற்ற வீட்டிற்குள் சென்று பார்க்க காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர் கொலைச் சம்பவங்களால் அச்சத்தில் தூத்துக்குடி மக்கள்!

தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 8-க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கந்தன் காலனியில் பெண் ஒருவர் நகைக்காக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தக் கொலை மற்றும் நகைக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தப்பிச் சென்றனர்? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னரே கொலையின் பின்னணி மற்றும் சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் தெரியவரும்.