தமிழக முதல்வர் கனிவுடன் பாராட்டிய மாற்றுத்திறனாளியை - தூக்கு கயிறுடன் அலைய வைத்த கோவில்பட்டி தாலூகா அலுவலக அதிகாரிகள்!
கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் தூக்கு கயிறுடன் தர்ணா மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் தூக்கு கயிறுடன் தர்ணா மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலூகாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்கள் எந்த இடம் என்று அளந்து கொடுக்கப்படவில்லை. இது குறித்து பலமுறை தாலூகா அலுவலகத்தில் முறையீட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து தாலூகா அலுவலகத்தில் கேட்க சென்றால் மாற்றுத் திறனாளிகளை அங்குள்ள அதிகாரிகள் அவதூறாக பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச பட்டாவிற்கு உரிய இடத்தினை அளவீடு செய்து தர வேண்டும், தங்களை அவதூறாக பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா மற்றும் தூக்கு கயிறுடன் தாலூகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் சுசீலா பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தினை கைவிட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டிக்கு வருகை தந்த போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளை பார்த்து பேசியது மட்டுமின்றி, அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்றார். அப்போது அங்கு இருந்த மாற்றுத்திறனாளி சின்னராசுவிடம் கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை தட்டிக்கொடுத்து பாராட்டினார் அந்த மாற்றுத் திறனாளிக்கும் தற்போது வரை இடத்தினை அளந்து கொடுக்கவில்லை. முதல்வர் கனிவுடன் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வரும் நிலையில் இங்குள்ள அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.