பஸ் ஸ்டாப்பில் பெண் வெட்டிக் கொலை : தூத்துக்குடியில் பயங்கரம்!

பஸ் ஸ்டாப்பில் பெண் வெட்டிக் கொலை : தூத்துக்குடியில் பயங்கரம்!

தூத்துக்குடியில் பஸ் ஸ்டாப்பில் மாநகராட்சி தூய்மை பணியாளரை வெட்டிக் கொலை செய்த அவரது கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் மஞ்சள்நீர் காயல் பகுதியைச் சேர்ந்தவர் ஐகோர்ட் மனைவி கனகா(45). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதால், கனகா தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவர் வழக்கம்போல இன்று காலையில் தூய்மைப் பணிக்காக தூத்துக்குடி சிஜிஇ காலனி பகுதியில் பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். 

அப்போது அங்கு வந்த மர்ம நபர் கனகாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் கனகாவின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கனகா பழைய காயலில் உள்ள ஒரு மீன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்த பசுவந்தனையைச் சேர்ந்த முனியசாமி (40) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். 

இதையடுத்து கனகா தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தன்னை விட்டு பிரிந்து சென்றதால் கனகாவை முனியசாமி வெட்டிக் கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். எப்போதும் வென்றான்பேருந்து நிறுத்தம் அருகே சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதேபோன்று தூத்துக்குடியில் இந்த கொலை நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.