திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழங்கினார்!!

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழங்கினார்!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவியினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (24.11.2024) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த யானை பாகன் மற்றும் அவரது உறவினரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 இலட்சம் மற்றும் ரூ. 5 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் கடந்த 18.11.2024 அன்று திருக்கோயில் யானை தெய்வானை அருகில் நின்றிருந்த யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோரை எதிர்பாராதவிதமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்லையும், ஆறுதலையும் தெரிவித்ததோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்திரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று (24.11.2024) திருச்செந்தூருக்கு சென்று திருக்கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த யானை பாகன் உதயகுமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ. 2 இலட்சம், திருக்கோயில் சார்பில் ரூ. 5 இலட்சம் மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சார்பில் ரூ. 3 இலட்சம் என ஆக மொத்தம் ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையையும், அவரது உறவினர் சிசுபாலனின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ. 2 இலட்சம் மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சார்பில் ரூ. 3 இலட்சம் என ஆக மொத்தம் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையையும் வழங்கி, அக்குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். 

முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திருக்கோயிலுக்கு சென்று யானை தெய்வானையை பார்வையிட்டு, அதற்கு கரும்பு துண்டுகளை வழங்கி, யானையின் உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.