தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 801 கோரிக்கை மனுக்கள்!!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 716 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம், சுய தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, முதலமைச்சரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டி, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 85 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.