தூத்துக்குடியில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3பேர் கைது: 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!!

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் கடந்த 2 மாதங்களாக பழைய பஸ் நிலையம், மார்க்கெட் அரசு மருத்துவமனை உள்பட பல இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருடு போனது. இது சம்பந்தமாக மத்தியபாகம், தென்பாகம், வடபாகம், ஏரல் உள்பட பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் டவுன் ஏஎஸ்பி மதன் தலைமையிலான தனிப்படை சப் இன்ஸ்பெக்டர சுடலைமுத்து மற்றும் போலீசார் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்
இதில் அவர் தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் கற்குவேல் குமார் என்ற அப்பாச்சி குமார் (31) என்பதும் அவர் தனது நண்பர்கள் முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் 1வது தெருவை சேர்ந்த சுந்தரவேல் மகன் பட்டு ராஜா (25), முத்தையாபுரம் ராஜீவ் நகர், 7வது தெருவை சேர்ந்த சவரி முத்து மகன் செல்வம் (44) ஆகியோர்களுடன் சேர்ந்து தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி ஏரல் உள்பட பல பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.
இது சம்பந்தமாக மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வி ஆகியோர் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடமிருந்து 11 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.