வீட்டு வசதி வாரியத்தின் செயல்பாட்டை கண்டித்து தூத்துக்குடியில் 2500 பேர் தேர்தல் புறக்கணிப்பு: தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிரடி முடிவு!!

வீட்டு வசதி வாரியத்தின் செயல்பாட்டை கண்டித்து தூத்துக்குடியில் 2500 பேர் தேர்தல் புறக்கணிப்பு: தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிரடி முடிவு!!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜூவ் நகர் பகுதியில் பொதுமக்களின் பட்டா இடமான‌ சுமார் 18 ஏக்கர் நிலம் கடந்த 1987 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் சார்பில் கையகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து அந்த பகுதி மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 1991 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் நிலத்தை மீண்டும் வழங்கி அவர்களுக்கு தடையில்லா சான்று மற்றும் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக ராஜூவ் நகர் பகுதி பொதுமக்களுக்கு தடையில்லா சான்று மற்றும் பட்டா வழங்கப்படாததால் அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 250 குடும்பத்தினர் தங்களது நிலத்தை தங்களது சொந்த தேவைக்காக அடகு வைக்கவும் விற்பனை செய்யவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் அவர்கள் போராட்டம் நடத்தும் போதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் இந்த பிரச்சனைக்கான தீர்வு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். இதனை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் இதுவரை பாதிக்கப்பட்ட ராஜிவ் நகர்  பகுதி மக்களுக்கு எவ்வித நட்வடிக்கையும் நடைபெறவில்லை.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ராஜிவ் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 2500 பேர் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மொத்தமாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை ஆகியோருக்கு மனுவும் அளித்துள்ளனர்.