காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை முழுமையாக வழங்க கோரி மக்கள் மனு

கயத்தாறு தாலுகாவிற்குட்பட்ட காமநாயக்கன்பட்டி ஊராட்சியில், 100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் சாலமன் தலைமையில் இந்த மனு வழங்கப்பட்டது.

அவர்கள் அளித்த மனுவில், காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் விவசாய வளமோ, மாற்றுத் தொழில் வாய்ப்புகளோ இல்லாத நிலையில், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் 100 நாள் வேலைத் திட்டத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில காலமாக 100 நாள் வேலை முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பது, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், அந்த கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பள்ளி வளாகத்தின் கட்டுமான பணிகளுக்காக, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒரு வார சம்பளத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் உடனடியாக 100 நாள் வேலைத் திட்டத்தை மீண்டும் தொடங்கி, வேலை நாட்களை முழுமையாக வழங்கவும், பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத் தொகையை தொழிலாளர்களுக்கு வழங்கவும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.