உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி இடைக்கால நிவாரணத் தொகையை வழங்க கோரி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தூத்துக்குடி என் டி பி எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் வழங்கிய இடைக்கால நிவாரண தொகையை உடனே வழங்கக்கோரி என் டி பி எல் அனல்மின் நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்எல்சி தமிழ்நாடு பவர் பிளான்ட் லிமிடெட் என்ற அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இவர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்காமல் என் டி பி எல் அனல்மின் நிலையம் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு முடிவுக்கு வந்து கடந்த 15.11.2023 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பென்ஞ் என் டி பி எல் நிர்வாகத்தின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து இடைக்கால நிவாரணமாக 2021 ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினசரி 100 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் என் டி பி எல் நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்தும் உயர்நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மேலும் பிரதி மாதம் ஏழாம் தேதி சம்பளம் வழங்க வேண்டும், டி ஏ நிலுவைத் தொகை உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல் மின் நிலையம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு என் டி பி எல் சங்க கிளை தலைவர் கணபதி சுரேஷ் தலைமை வகித்தார். கிளை செயலாளர் அப்பா துரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சி முத்து, நிர்வாகி நாகராஜ் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர் கலந்து கொண்டு என் டி பி எல் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.