தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு விழா – மாணவர்களுக்கு பரிசுகள்!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு விழா – மாணவர்களுக்கு பரிசுகள்!

தூத்துக்குடி: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ‘வளமான வளர்ச்சிக்கு நேர்மை’ என்ற மையக்கருத்தை வலியுறுத்தி நடைபெற்ற கண்காணிப்பு விழிப்புணர்வு வார நிறைவு விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் துறைமுக ஊழியர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் ‘வளமான வளர்ச்சிக்கு நேர்மை’ (Vigilance: A Key to Prosperity) என்ற கருப்பொருளின் கீழ் கண்காணிப்பு விழிப்புணர்வு வார நிறைவு விழா நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில் துறைமுகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி பி. கவின் மகாராஜ் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், கண்காணிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட துறையினரின் பொறுப்பு மட்டுமல்ல; அனைவரும் இணைந்து ஏற்க வேண்டிய கூட்டுப் பொறுப்பாகும் என்றார். துறைமுகத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், பணிகளில் உரிய விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதுடன், பணிகளின் தரத்தை உறுதி செய்து, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அவற்றை நிறைவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மாணவர்கள், ஊழியர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக துறைமுக ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன்படி விழிப்புணர்வுப் பேரணி, தெருநாடகம், கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, விவாதப் போட்டி மற்றும் கோலப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், துறைமுக அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன.

வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டு!

இதன் நிறைவாக நடைபெற்ற விழாவில், விழிப்புணர்வு இயக்கத்தின்போது நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் துறைமுக ஊழியர்களுக்குச் சிறப்பு விருந்தினர் ராஜேஷ் சௌந்தரராஜன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

தொடர்ந்து மாணவர்கள் மற்றும் துறைமுக ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் நிறைவில் துணைத் தலைமை கண்காணிப்பு அதிகாரி ஆர். பத்மநாபன் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் துறைமுகத்தின் பல்வேறு துறைத் தலைவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இத்தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.