ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு: தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனக்கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் சிபி எம் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
வேதாந்தா நிறுவனத்திற்கு உட்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் செயல்பட்டு வந்தது. இந்த ஆலை அமைந்துள்ள பகுதிகளில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுவதாக 2018ஆம் ஆண்டு பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் நடத்தியது. இந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தடியடி காரணமாக 15பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையை கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனக்கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது, ''ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனக்கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆலையால் செய்யப்பட்ட விதிமீறல்கள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டது. ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்புமீறல் இருந்ததாக கருதவில்லை. உயர்நீதிமன்ற முடிவில் தலையிட விரும்பவில்லை'' எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.
பட்டாசு வெடித்து கொண்டாடடம்
ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பை வரவேற்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ஜுனன், ஆர்.ரசல், தா. ராஜா., எஸ்.அப்பாதுரை, மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து, ஒன்றிய செயலாளர் கே.சங்கரன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், மாணவர் சங்க மாவட்ட தலைவர் கிஷோர் குமார், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் இணிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.