தூத்துக்குடியில் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி : ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடியில் ஆட்சிமொழித் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி : ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடியில் ஆட்சிமொழித் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில், தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவியர்களின் ஆட்சிமொழித் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், கொடியசைத்து தொடங்கி வைத்து, அரசு வாகனத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறையின் 2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் 7 நாட்கள் ஆட்சிமொழிச் சட்ட வாரமாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அவ்வறிவிப்பிற்கிணங்க, இவ்வாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் - 2022-2023 இன்று 21.02.2023 முதல் 28.02.2023 வரை ஒருவார காலம் நடைபெறவுள்ளது. முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று இந்த விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைத்துள்ளோம்.

தொடர்ந்து, ஆட்சிமொழிச் சட்ட வார விழா நடைபெறும் ஒரு வார காலத்திற்கு விழிப்புணர்வுப் பேரணி, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, பிழையின்றி தமிழில் குறிப்புகள் வரைவுகள் எழுதுதல் குறித்து பயிற்சியளித்தல், பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட விளக்கக்கூட்டம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேலும், மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்திற்கான ஒட்டுவில்லைகளை ஒட்டியும், துண்டறிக்கை மற்றும் அரசாணையினை வழங்கியும் இவ்விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் என தெரிவித்தார்.

உலகத் தாய்மொழி தினத்தை சிறப்பிக்கும் வகையில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற ஆட்சிமொழிச் சட்ட வார விழா விழிப்புணர்வுப் பேரணியில், மாணவர்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு, தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே, தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தப் பேரணி தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் முதல் குரூஸ் பர்னாந்து சிலை வரை சென்று நிறைவடைந்தது.

மேலும், மங்காத தனித்தமிழே மாநிலத்தின் ஆட்சிமொழி, வீறுடைய செம்மொழி தமிழ்மொழி - உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி, தமிழில் கையொப்பமிடுவோம், நாம் தமிழர் என்று பாடுவோம், வணிக நிறுவனங்களின் பெயர்பலகைகள் தமிழில் அமையட்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை அரசு வாகனங்களிலும், அலுவலகங்களிலும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (தமிழ் வளர்ச்சி) மு.சம்சுதீன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், அரசு அலுவலர்கள் உட்பட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.