“தேர்தல் முன் தூத்துக்குடியில் கண்காணிப்பு கச்சிதம்! ரூ.52 லட்சம் ரொக்கம் சிக்கியது..!

“தேர்தல் முன் தூத்துக்குடியில் கண்காணிப்பு கச்சிதம்! ரூ.52 லட்சம் ரொக்கம் சிக்கியது..!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மேற்கொண்ட அதிரடி சோதனைகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் வெளியிட்ட தகவலின்படி, வெள்ளிக்கிழமை (27.03.2026) வரை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.52,69,515/- ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்குடன், வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்ததாக சந்தேகிக்கப்படும் ரூ.7,24,740/- மதிப்பிலான இலவசப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ.2,13,297/- மதிப்பிலான மதுபானங்கள் மற்றும் ரூ.5,82,600/- மதிப்பிலான சட்டவிரோத போதைப் பொருட்களும் சிக்கியுள்ளன.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்டவற்றில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், ரூ.45,34,505/- ரொக்கத் தொகை மற்றும் ரூ.2,00,000/- மதிப்பிலான பொருட்கள் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல்களை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் சோதனைகள் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளதுடன், பணம் மற்றும் பொருட்கள் நகர்த்தப்படுவதில் கடும் கண்காணிப்பு நிலவுகிறது.