பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : கனிமொழி பிரச்சாரம்!

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : கனிமொழி பிரச்சாரம்!

நம் பிள்ளைகள், நம் பெண்கள், நம் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் மீண்டும் பாஜக ஆட்சி வரக் கூடாது என்று திமுக வேட்பாளர் கனிமொழி பேசினார்..  

மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்திய கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி கருணாநிதி  இன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது கனிமொழி கருணாநிதி பேசும்போது, "கடந்த  சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் உங்களை சந்தித்த முதலமைச்சர் அண்ணன் தளபதி,  தான் அளித்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றியிருக்கிறார்.  பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று தேர்தலில் வாக்குறுதியளித்தார். 

வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்தே  விடியல் இலவச பயணம்தான். அதேபோல மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்று வாக்குறுதி அளித்தார். இப்போது ஒரு கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை வழங்கி வருகிறார். இப்போது மோடி அரசு நமது தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்காத காரணத்தால்தான் அனைத்து மகளிருக்கும் வழங்க முடியாத ஒரு நிலை இருக்கிறது. ஒன்றியத்தில் நம் ஆட்சி இந்தியா கூட்டணி ஆட்சி வந்தவுடனே... தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கும். அதன் பின் மீதி இருக்கிற அத்தனை சகோதரிகளுக்கும் வரவேண்டிய மகளிர் உரிமைத் தொகை  கண்டிப்பாக வந்து சேரும்.

இப்ப கேஸ் விலை என்ன?  மோடி ஆட்சிக்கு வரும்போது 410 ரூபாய் இருந்தது. இப்போது 1200 ஆக உயர்ந்தது. மகளிர் தினம் மார்ச் 8ல் மோடி நூறு ரூபாயை குறைத்தார்.  மகளிர் தினம்னா கேஸ் சிலிண்டர் விலை குறைக்கிறதுதானா? மகளிர்னா சமைக்குறதுக்குத்தான்னு மோடி முடிவு பண்ணிட்டார்.

ஆனால் நமது முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.  இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும்  கேஸ் விலையை  500 ஆக குறைப்போம் என்று வாக்குறுதியளித்துள்ளார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.  ஐந்து விரல்களை விரித்தால் அதுதான் உதயசூரியன். உதயசூரியனுக்கு வாக்களியுங்கள், கேஸ் சிலிண்டர் விலை 500 ஆக குறையும். இந்தத் தேர்தல் ஒன்றியத்தில் இருக்கும் ஆட்சியை அகற்றும் தேர்தல். உங்கள் அக்கவுண்டில் 15 லட்சம் போடுவதாக சொல்லி ஆட்சிக்கு வந்தார் மோடி.  ஆனால் நம் அக்கவுண்டில் இருக்கிற காசையும்  மினிமம் பேலன்ஸ் இல்லை என சொல்லி அதையும் பிடுங்கிக்கொள்கிறார்.

100 நாள் வேலை யாருக்குமே இல்லை. மாசக் கணக்கில் 100 நாள் வேலைக்கான சம்பளம் வரவில்லை. ஏனென்றால் மோடி ஆட்சியில் 100 நாள் வேலையை முடக்குவதற்காக நிதி ஒதுக்குவதே இல்லை.  நம் இந்தியா கூட்டணி ஆட்சி மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சி வந்ததும் 100 நாள் வேலையை 150 நாளாக ஆக்குவோம் என்றும்  சம்பளம் 400 ரூபாய் என்றும் அறிவித்துள்ளார் முதல்வர் தளபதி. காங்கிரஸும் 400 ரூபாய் சம்பளம் என்று அறிவித்துள்ளது.

மக்களுக்கு விவசாயக் கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்றால் மோடி செய்ய மாட்டார். மாணவர்களுக்கு கல்விக் கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்றால் செய்யமாட்டார். ஆனால் அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்கு  68 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறார் மோடி.

இந்த பாஜக ஆட்சியில் பாஜக எம்பிக்கள் 44 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான வழக்கு இருக்கிறது. பிறகு எப்படி பெண்களுக்கு இந்த பாஜக ஆட்சியில் பாதுகாப்பு இருக்கும்?  இதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தத் தேர்தல் வெறும் ஆட்சிப் பொறுப்புக்கான தேர்தல் மட்டுமல்ல... நம் பிள்ளைகள், நம் பெண்கள், நம் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் மீண்டும் பாஜக ஆட்சி வரக் கூடாது.  

நம் வீட்டுப் பிள்ளைகளுக்காக தலைவர் கலைஞர் கொண்டுவந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு காரணமாக நம் பிள்ளைகள் படிக்க முடியவில்லை. புதிய கல்விக் கொள்கையின் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு கூட நுழைவுத் தேர்வை கொண்டு வருகிறார்கள். இதெல்லாம் சாதாரண சாமானிய வீட்டுப் பிள்ளைகள் படிக்க கூடாது என்பதற்காகவே. இரு நூறு வருடம் முன்பு இருந்த நிலையை உருவாக்கப் பார்ப்பதுதான் மோடி ஆட்சி.

கடலை மிட்டாய் தொழிலை மேம்படுத்த கடலை மிட்டாய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதற்காக கோவில்பட்டியில் கடலைமிட்டாய் மேம்பாட்டு வளாகத்தை அமைப்போம் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். மிகப்பெரிய  கார் தொழிற்சாலை தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

உங்களோடு நின்று பணியாற்றும் வாய்ப்பை எனக்கு மீண்டும் அளிக்க வேண்டும். போன தேர்தலில் நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது, ‘கனிமொழி சென்னையில் இருக்கிறவங்க. இங்க வரமாட்டாங்க’னு சிலர் சொன்னார். ஆனால் தூத்துக்குடி எனது இரண்டாவது தாய் வீடு என்று சொல்லும் அளவுக்கு இங்கேயே  நான் இருக்கிறேன்.  முதலமைச்சரால் முன்னிறுத்தப்பட்டுள்ள எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்” என்று பேசினார் கனிமொழி.

நாலாட்டின்புதூர், முடுக்குமீண்டான்பட்டி, தோனுகால், வானரமுட்டி, குமரெட்டியாபுரம், காலாம்பட்டி, கட்டாலங்குளம், காலாங்கரைப்பட்டி, கழுகுமலை, கே.துரைச்சாமிபுரம், கே.வெங்கடேஸ்வரபுரம், தெற்கு கழுகுமலை, கரடிகுளம், கே.சுப்பிரமணியபுரம், செட்டிகுறிச்சி, திருமங்கலகுறிச்சி, வெள்ளாளங்கோட்டை, சிதம்பரம்பட்டி, கயத்தாறு, சன்னதுபுதுக்குடி, ராஜா புதுக்குடி, பன்னீர்குளம், தெற்கு மயிலோடை, அகிலாண்டபுரம், அய்யனார்ஊத்து, உசிலங்குளம், பனிக்கர்குளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், காப்புலிங்கம்பட்டி, சிவஞானபுரம், ஆசூர், கரிசல்குளம், கடம்பூர், திருமலாபுரம், கே.சிதம்பராபுரம், குருமலை, குப்புனாபுரம்,  வடக்கு வண்டானம், தெற்கு வண்டானம், காயநாயக்கன்பட்டி, கொப்பம்பட்டி, முடுக்கலான்குளம், குருவிநத்தம், தீத்தாம்பட்டி, தொட்டம்பட்டி, அச்சங்குளம் ஆகிய பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். 

மேலும் கோவில்பட்டி பகுதிக்கு தன்னுடைய எம்பி நிதியில் இருந்து செய்யப்பட்டிருக்கும் குடிநீர் திட்டப் பணிகள், சாலைப் பணிகள், நியாய விலைக் கடைகள்,ஹைமாக்ஸ் விளக்குப் பணிகள் என்பவற்றைப் பட்டியலிட்டார் கனிமொழி. உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நகர் மன்றத் தலைவர் கருணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.