பனிமய மாதா திருவிழா உணவகங்கள் உரிமம் பெற வேண்டும் : ஆட்சியா் அறிவுறுத்தல்!
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய திருவிழாவிற்காக, தற்காலிகமாகச் செயல்படும் உணவகங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் விற்பனை செய்வோா் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூய பனிமய மாதா ஆலயத் தேரோட்ட விழாவில் அமைக்கப்படும் தற்காலிக உணவகங்கள், அன்னதானம் வழங்குவோா் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை https://www.fssaicertificate.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். பதிவுச் சான்றிதழ் கட்டணம் ரூ.100, சில்லறை வணிகம் மற்றும் உணவகத்திற்கான உரிமக் கட்டணம் ரூ.2ஆயிரம் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும்.
உணவுப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீா் பாதுகாப்பானதாகவும், நன்னீராகவும் இருக்க வேண்டும். உணவுப் பொருள்களை சுகாதாரமான முறையில் வைத்திருந்து வாடிக்கையாளா்களுக்கு கொடுக்க வேண்டும். உரிமம் பெறாதது மற்றும் உணவுப்பொருள்களின் தரத்தில் குறைபாடு, சுகாதாரக் குறைபாடு கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். உணவுப் பொருள்களின் தரம் குறைபாடு குறித்து, 94440-42322 என்ற வாட்ஸ்ஆப் எண், FSSAI செயலி, https://foodlicenceonline.com/ என்ற இணையதளத்தில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.