தூத்துக்குடி நகரின் முக்கிய சாலைகளில் 650 அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடக்கம்.!!

தூத்துக்குடி நகரின் முக்கிய சாலைகளில் 650 அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடக்கம்.!!

தூத்துக்குடி நகரின் முக்கிய சாலைகளில் புதிதாக 650 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது. 

தூத்துக்குடி நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து காவல் துறை சார்பில் 142 கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே செயல்பட்டு வந்தன. கடந்த 2018-ம் ஆண்டு வன்முறை சம்பவத்தின் போது பெரும்பாலான கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டன. அதன் பிறகு நகரில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் முழுமையாக இல்லாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில் எஸ்பி ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாநகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் தனியார் பங்களிப்பு மூலம் 650 அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை அமைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து புதிய கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கான பணிகள் தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் இந்திய உணவுக்கழக குடோன் அருகே நேற்று பூமி பூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ், சண்முகபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் கட்டமாக தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு, எட்டயபுரம் ரோடு, திருச்செந்தூர் ரோடு, வி.இ. ரோடு, ஜார்ஜ் ரோடு, காமராஜ் ரோடு உள்ளிட்ட நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் 650 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மேலும், நகரின் அனைத்து நுழைவு வாயில் பகுதிகளிலும் 8 இடங்களில், வாகனங்களின் பதிவெண்ணை துல்லியமாக பதிவு செய்யும், அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

இந்த கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் தனி லைன் மூலம் இணைக்கப்படுகின்றன. இந்த கேமராக்களை கண்காணிக்க தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் அதிநவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். 

இந்த பணிகள் அனைத்தும் 4 மாதங்களில் முடிவடையும். இந்த கண்காணிப்பு கேமராக்கள், நகரில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும் உதவியாகவும் இருக்கும். இதன் தொடர்ச்சியாக அடுத்தக்கட்டமாக நகரின் முக்கிய தெருக்கள் உள்ளிட்ட உள்புற பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.