தூத்துக்குடி CSI ஆலயத்தில் பரபரப்பு: குருவை மாற்றக் கோரி ஆராதனையின்போது பெண்கள், ஆண்கள் முற்றுகை போராட்டம்

தூத்துக்குடி CSI ஆலயத்தில் பரபரப்பு: குருவை மாற்றக் கோரி ஆராதனையின்போது பெண்கள், ஆண்கள் முற்றுகை போராட்டம்

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ திருச்சபைக்குச் சொந்தமான தூய இம்மானுவேல் ஆலயத்தில், குருவை மாற்றக் கோரி ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின்போது பெண்கள் மற்றும் ஆண்கள் இணைந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆலய குருவாக பொறுப்பேற்ற காலேப் மான்சிங், பெண்களிடம் அவமதிப்பான முறையில் பேசி, ஊழியம் செய்ய வரும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வருவதாக குற்றம்சாட்டினர். மேலும், தனது கருத்தை ஏற்காத பெண்களுக்கு ஊழியம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்றும், வயதான பெண்களும் ஊழியம் செய்யக்கூடாது எனக் கூறப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலை முயற்சி வழக்கை சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள்

போராட்டக்காரர்கள், ஆலயத்தில் வேதபாட ஆசிரியராக பணியாற்றிய சுபா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு காலாவதியான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதாகவும், குரு காலேப் மான்சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

"இந்த குரு எங்களுக்கு வேண்டாம்"

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "இந்த குரு பொறுப்பேற்ற பிறகு ஆலயத்தில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை. ஆலய வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரை உடனடியாக மாற்றி புதிய குருவை நியமிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பேராயரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

போராட்டம் நடைபெற்றபோது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆலய ஊழியர் ஒருவர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாகக் கூறி, பெண்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலய வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

குறிப்பு: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் தரப்பில் முன்வைக்கப்பட்டவை. இதுகுறித்து குரு காலேப் மான்சிங் அல்லது சிஎஸ்ஐ நிர்வாகத்தின் பதில் இதுவரை வெளியாகவில்லை.