தூத்துக்குடியில் நீர் தேக்க தொட்டியில் பெற்ற மகனை தள்ளி விட்டு தாய் தற்கொலை..!

தூத்துக்குடியில் நீர் தேக்க தொட்டியில் பெற்ற மகனை தள்ளி விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தெர்மல்நகர் கோவில்பிள்ளை நகர் 6வது தெருவில் வசிப்பவர் தங்கராஜ், இவர் தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் காண்ட்ராக்ட் லேபர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (27). இந்த தம்பதிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு வீரமித்திரன் 1 1/2 வயது ஆண் குழந்தை உள்ளது. தற்போது நந்தினி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் தான் குடியிருக்கும் வீட்டின் காம்பவுண்டின் முன் பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டியில் தனது குழந்தை வீர மித்திரனை தொட்டிக்குள் தூக்கி வீசி விட்டு தானும் அதே தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதை காம்பவுண்டுக்குள் குடியிருந்த பொதுமக்கள் பார்த்து இருவரையும் மீட்டனர். ஆனால் நந்தினி இறந்துவிட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை போகும் வழியில் பரிதாபமாக இறந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தெர்மல் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.