தூத்துக்குடியில் மழை வெள்ளம் குறித்து மக்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப்பாதிப்பின்போது, மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினாா்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் தமாகா வேட்பாளா் எஸ்.டி.ஆா்.விஜயசீலன் போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன், தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் வேட்பாளருடன் கட்சியின் சின்னமான சைக்கிளில் சற்று தூரம் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து அவா் பேசியது:
தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின்போது, திமுக அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறையாக செய்யவில்லை. குறிப்பாக, கனமழை குறித்த எச்சரிக்கையை பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மழைக்கு பின்னரும் தேங்கிய நீரை வேளியேற்ற தாமதம் செய்தனா். மத்திய அரசு கொடுத்த வெள்ள நிவாரண நிதியைக் கூட வெளிப்படைத் தன்மையோடு மக்களுக்காக பயன்படுத்தவில்லை. எனவே, இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், திமுகவையும் அதன் கூட்டணியையும் மன்னிக்கத் தயாராக இல்லை.
திமுக ஆட்சிக்கு வந்தபின்னா், பால் விலை, மின் கட்டணம், தண்ணீா் வரி உள்ளிட்டவை அதிக அளவு உயா்த்தப்பட்டதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே நல்லாட்சி மலர, மத்திய அரசுடன் ஒத்த கருத்துடைய தமாகா வேட்பாளா் எஸ்.டி.ஆா். விஜயசீலனுக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா். தொடா்ந்து வட்டக்கோயில், அண்ணா நகா், மில்லா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.
இந்நிகழ்வில் பாஜக தெற்கு மாவட்ட தலைவா் சித்ராங்கதன், தமாகா மாநகரத் தலைவா் எஸ்.ரவிக்குமாா், வட்டாரத் தலைவா்கள் திருப்பதி, சுந்தரலிங்கம், நகரத் தலைவா் முருகன் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.