தம்பியை தாக்கிய வழக்கில் அண்ணன் உள்பட 4 பேர்களுக்கு 14 மாதம் சிறை தண்டனை!
சொத்து தகராறில் தம்பியை தாக்கிய வழக்கில் அண்ணன் உள்ளிட்ட 4பேர்களுக்கு 14 மாத சிறைத் தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் பழனி. விவசாயியான இவருக்கும் இவரது அண்ணன் பெருமாள் என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பழனி, கடந்த 2015 ஆம் ஆண்டு வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது பெருமாள், அவரது மனைவி சொர்ணம், மகன்கள் ஐயப்பன், நாராயணன், சுரேஷ் ஆகியோர் தாக்கி காயப்படுத்தினர்.
இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பழனி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 5பேரை கைது செய்து சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசி ரீனா, குற்றச்சாட்டப்பட்ட பெருமாள், அவரது மகன்கள் ஐயப்பன், நாராயணன், சுரேஷ் ஆகியோருக்கு தலா 14மாத சிறை தண்டனையும் , மனைவி சொர்ணம் உள்ளிட்ட 5பேருக்கும் மொத்தம் ரூ.44 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ராஜ்மோகன் வாதாடினார்.