தூத்துக்குடியில் பைக் விபத்தில் போலீஸ் ஏட்டு பலி!!
தூத்துக்குடியில் மோட்டார் பைக்கில் இருந்து தவறி விழுந்து போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை, மேலகூட்டுடன்காட்டைச் சேர்ந்தவர் சரவணமுத்து மகன் வெங்கடரமணன் (44). இவர் சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அவர் கோரம்பள்ளம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து விடுமுறைக்கு வந்த போலீஸ் ஏட்டு விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.