ஆத்தூரில் பெண் ஆய்வகப் பணியாளருக்கு அரிவாள் வெட்டு : போலீஸ் விசாரணை!
ஆத்தூரில் பெண் ஆய்வகப் பணியாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே குரங்கணி சந்நிதி தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மனைவி பஞ்சவர்ணம் (40). இவர், ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சவர்ணத்தின் கணவர் வெற்றிவேல் இறந்துவிட்டார்.
அதன்பிறகு பஞ்சவர்ணத்துக்கு தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்து மகன் கிறிஸ்டி ஜார்ஜினுடன் (48) பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்டி ஜார்ஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளனர். கிறிஸ்டி ஜார்ஜின் மகன்கள் பஞ்சவர்ணத்தைக் கண்டித்ததால், கடந்த ஆண்டு முதல் கிறிஸ்டி ஜார்ஜுடன் பேசுவதை பஞ்சவர்ணம் தவிர்த்தார். இந்நிலையில் நேற்று பஞ்சவர்ணம் இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றபோது மேலாத்தூர் சாலையில் அவரை பின்தொடர்ந்து சென்ற கிறிஸ்டி ஜார்ஜ் அரிவாளால் அவரை வெட்டினார்.
இதில், பஞ்சவர்ணம் பலத்த காயமடைந்தார். பின்னர் அங்கிருந்து சென்ற கிறிஸ்டி ஜார்ஜ் தனது வீட்டில் பூச்சிமருந்து குடித்துத் தற்கொலைக்கு முயன்றாராம். அவரை உறவினர்கள் மீட்டு ஏரல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.