ஆளுநர் கூறியதை அரசியலாக்க வேண்டாம் : ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் பேட்டி
ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக ஆளுநர் பேசியதை அரசியல் ஆக்க வேண்டாம் என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக ஆளுநர் பேசியதை அரசியல் ஆக்க வேண்டாம் என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கு சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதிக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளது. ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினும், ஆலையை எந்தக் காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என மற்றொரு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் தெரிவித்த கருத்து தற்போது பேசும்பொருளாக மாறி உள்ளது. இந்தியாவின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிவர்த்தி செய்ததாகவும், அந்த ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதியுதவி செய்யப்பட்டதாகவும் ஆளுநர் ரவி கருத்து தெரிவித்து இருந்தார்.ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், ஆளுநரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு வெளி நாட்டில் இருந்து நிதி வந்தது உண்மை என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் நான்சி, தனலட்சுமி உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக ஆளுநர் பேசியது இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தான். போலி போராளிகள் வெளி நாட்டில் இருந்து நிதி வாங்கி தூத்துக்குடி மக்களை மூளை சலவை செய்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டி விட்டனர்.
போராட்டத்திற்கு காரணமே போலி போராளிகள் தான். பொதுமக்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆளுநரும் போலி போராட்டகார்களை தான் சொல்லியுள்ளாரே தவிர மக்களை குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. இந்தியாவின் காப்பர் தேவை 40 சதவீதத்தை ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்து வந்தது.
ஆனால், தற்போது வெளிநாட்டில் காப்பர் தேவைக்காக கையேந்த வேண்டிய நிலையில் உள்ளோம். நம்ம ஊரில் வளத்தை வைத்து விட்டு நாம் ஏன் வெளிநாட்டில் கையேந்த வேண்டும். போராட்டம் ஆரம்பித்தது பாயில் வேதாந்தா சமயந்தரதாஸ் என்பவர் வெளிநாட்டில் இருந்து நிதியை "அதர் மீடியா" என்ற தொண்டு நிறுவன நித்தியானந்தன் ஜெயராமனுக்கு பண பரிமாற்றம் நடந்துள்ளது
பின்னர் அங்கிருந்து தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வீராங்கனை அமைப்பை சேர்ந்த பேராசிரியர் பாத்திமா பாபுவிற்கு கைமாற்றப்பட்டு போராட்டம் தூண்டப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை தூன்டிய அனைவர்களும் பாதுகாப்பாக இருந்து கொண்டனர். அப்பாவிகள் தான் 13 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.