ஒட்டப்பிடாரம் அருகே 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்கள் கண்டெடுப்பு!

ஒட்டப்பிடாரம் அருகே பட்டினமருதூர் கிராமத்தில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, 2¼ அடி உயரம் இரண்டடி அகலம் வீரக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், பட்டினமருதூர் கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி அளித்த தகவலின் பேரில் பட்டினமருதூர் ஸ்ரீமலையம்மன் கோவில் அருகே தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் த.த.தவசிமுத்து மற்றும் தூத்துக்குடி ராஜேஷ் ஆகியோர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "நீண்டகாலம் மண்ணில் புதையுண்டு கிடந்ததாலும், வெள்ளைக் கல் என்பதாலும் சிற்பம் தேய்ந்தும், சிதைந்தும் காணப்படுகிறது. மணிமகுடம் அணிந்தவாறு அரசன் சிற்பம் குதிரையில் அமர்ந்த நிலையில், குதிரையின் முன்னங்கால் தூக்கியவாறு காணப்படுகிறது. போரில் காயம்பட்டுஇறந்து போன மன்னனைக் குறிப்பிடுகிறது.
குதிரைக்கு பின்புறம் கொற்றக் குடை ஏந்திய நிலையில் வீரன் ஒருவன் காணப்படுகிறார். குதிரையின் முன்பு சாமரம் வீசும் வீரன் ஒருவன், வலப்புறம் மேலே வலம்புரி விநாயகர் அருளீந்தவாறு உள்ளார். மேற்புறம் இரு பக்கங்களிலும் மதுக்குடத்தைப் பிடித்தவாறு வீரர்கள் உள்ளனர். மேலும் மற்றுமொரு நடுகல், மாலையம்மன் கோயிலில் இரண்டரை அடி உயரத்தில் நடுகல் ஒன்று உள்ளது. 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகலாம்.இரண்டு பெண்களும் உடன் மத்தியில் அவர்களின் கணவன் கும்பிட்ட நிலையில் நடுகல் ஆகும்.
அகால மரணம் வெட்டுப்பட்டோ, தீப்பாய்ந்தோ, காதல் மணத்தாலோ மாண்டவர்கள், தெய்வமாகி வழிபாட்டில் உள்ளனர். வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், பாண்டியர் காலத்தில் உள்ள சிற்பங்களா? அல்லது பல்லவர் கால சிற்பங்களா என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், இப்பகுதி கடற்கரை பகுதியில் பிள்ளையார், சுப்பிரமணிய சுவாமி சிலையும், வள்ளி தெய்வானை, நந்தி உட்பட பல்வேறு கடவுள்களின் சிலைகள் காணப்படுகிறது. இது தொடர்பாக தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த அரசு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.