50 ஆண்டு எம்.ஜி.ஆர் நிழற்குடை இடிப்பு: தூத்துக்குடியில் அதிமுக–திமுக மோதல் தீவிரம்!

தூத்துக்குடி 5வது வார்டில் 50 ஆண்டுகள் பழமையான எம்.ஜி.ஆர் பயணிகள் நிழற்குடை இடிப்பு விவகாரம் அரசியல் சர்ச்சையாக மாறியது. முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் குற்றச்சாட்டு; கவுன்சிலர் விளக்கம்.

50 ஆண்டு எம்.ஜி.ஆர் நிழற்குடை இடிப்பு: தூத்துக்குடியில் அதிமுக–திமுக மோதல் தீவிரம்!

தூத்துக்குடி மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட வட்டக்கோவில் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த எம்.ஜி.ஆர் பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டது அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “1965-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எம்.ஜி.ஆர் மன்றம் பின்னர் பேருந்து நிறுத்தமாக மாற்றப்பட்டது. மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை போலிப் பத்திரம் மூலம் அபகரிக்க முயற்சி நடைபெறுகிறது. இதுகுறித்து முன்பே மனு அளித்திருந்தேன். இருந்தபோதிலும் பேருந்து நிறுத்தம் மற்றும் காமராஜர் சிலை அகற்றப்பட்டுள்ளது. இது திமுக கவுன்சிலரின் புகாரின் பேரிலேயே செய்யப்பட்டுள்ளது. இதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். விரைவில் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த 5-வது வார்டு கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்சிலின், “கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கப் பணிக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. மேயரின் நேரடி ஆய்வுக்குப் பிறகே முடிவு எடுக்கப்பட்டது” என்றார்.

இந்த விவகாரம் தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது