“பொய்யான பாலியல் குற்றச்சாட்டா?” – தவெக மாவட்ட செயலாளர் பிரைட்டர், நகர செயலாளர் நிவாஸ் மீது புகார் அளித்த ரோகிணி மீது நடவடிக்கை கோரி அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மகளிர் அணியினர் மனு!

“பொய்யான பாலியல் குற்றச்சாட்டா?” – தவெக மாவட்ட செயலாளர் பிரைட்டர், நகர செயலாளர் நிவாஸ் மீது புகார் அளித்த ரோகிணி மீது நடவடிக்கை கோரி அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மகளிர் அணியினர் மனு!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக செயற்குழு உறுப்பினர் ரோகிணி, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பிரைட்டர், நகர செயலாளர் நிவாஸ் மற்றும் நிர்வாகி ரூஸ்வெல்ட் ஆகியோர் தன்னிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாகவும், தனது செல்போனை பறித்துச் சென்றதாகவும் குற்றம்சாட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் குறித்து திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருச்செந்தூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆறுமுகநேரி பகுதி மகளிர் நிர்வாகிகள், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் பிரைட்டர் மற்றும் நகர செயலாளர் நிவாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையிலும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் ரோகிணி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மகளிர் அணியினர், “ரோகிணி தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் அதை வெளியிட வேண்டும்” என தெரிவித்தனர்.

மேலும், “பெண்களுக்கு மரியாதை அளிப்பவர் அமைச்சர் ஸ்ரீநாத். அவரை நேரில் சந்தித்து எங்களது தரப்பு நியாயத்தை தெரிவித்துள்ளோம்” என்றும் கூறினர்.

இதனால் தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த விவகாரம் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.