தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு கடைகளை மூட கட்டாயப்படுத்தக் கூடாது – எஸ்.பி. சிவபிரசாத்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு கடைகளை மூட கட்டாயப்படுத்தக் கூடாது – எஸ்.பி. சிவபிரசாத்

தூத்துக்குடியில் இரவு 11 மணிக்கு கடைகளை மூடச் சொல்லி காவல்துறை கெடுபிடியா? 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் எஸ்.பி.யிடம் நேரில் மனு!

“கடைகளை மூட நான் சொல்லவில்லை; வியாபாரிகள் பயப்பட வேண்டாம்” – எஸ்.பி. சிவபிரசாத் அதிரடி அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் கடைகளை மூடுமாறு காவல்துறை அதிகாரிகள் வற்புறுத்தி வருவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டிய நிலையில், 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய மாவட்ட தலைவர் சிவா தலைமையில் வியாபாரிகள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்தை சந்தித்து தங்களது பிரச்சினையை எடுத்துரைத்தனர்.

அப்போது, சில காவல்துறை அதிகாரிகள், “எஸ்.பி. சார்தான் இரவு நேரத்தில் கடைகளை அடைக்கச் சொல்லியுள்ளார்” எனக் கூறி, இரவு 11 மணிக்கு கடைகளை மூடுமாறு வியாபாரிகளை வற்புறுத்துவதாக புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து வியாபாரிகளின் மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி. சிவபிரசாத், இரவு நேரத்தில் கடைகளை மூடுமாறு தான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனத் தெரிவித்ததாக வணிகர் சங்கத்தினர் கூறினர்.

மேலும், வியாபாரிகளை கடைகளை மூடுமாறு வற்புறுத்தக்கூடாது என்றும், இதனால் வியாபாரிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் எஸ்.பி. தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அந்தந்த சரகங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு, வியாபாரிகளிடம் கடைகளை மூடுமாறு வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்துவதாகவும் எஸ்.பி. உறுதியளித்ததாக வணிகர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய மாவட்ட தலைவர் சிவா கூறியதாவது:

“இரவு 11 மணிக்கு மேல் கடைகளை அடைக்கச் சொல்லி காவல்துறை அதிகாரிகள் கெடுபிடி செய்வதாக வியாபாரிகளிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து வியாபாரிகள் ஒன்றிணைந்து எஸ்.பி. அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தோம்.

‘நான் கடையை அடைக்கச் சொல்லவில்லை. வியாபாரிகள் எந்த பயமும் கொள்ள வேண்டாம். கடைகளை அடைக்கச் சொல்லக்கூடாது. அந்தந்த சரகங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளை அழைத்து பேசுகிறேன்’ என்று எஸ்.பி. தெரிவித்தார்.

மேலும், கடைகளின் பாதுகாப்பு தொடர்பாக வியாபாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கடைகளின் அருகே தேவையற்ற கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

காவல்துறையினரால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் வியாபாரிகள் வணிகர் சங்கத்தை தொடர்புகொள்ளலாம். தேவையானால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்துக்கு வணிகர் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர கடைகள் தொடர்பாக வியாபாரிகள் மத்தியில் நிலவி வந்த குழப்பத்திற்கு தற்போது தெளிவு ஏற்பட்டுள்ளதாக வணிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.