தூத்துக்குடியில் ஆக.20-ல் சிறப்பு தொழில் கடன் முகாம் - ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடியில் ஆக.20-ல் சிறப்பு தொழில் கடன் முகாம் - ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடியில் வருகிற 20ஆம் தேதி செவ்வாய்கிழமை புதிய தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதி நிறுவனமாகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இவ்வரசு நிறுவனம்; மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி மாநில தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின்கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. இச்சிறப்பு தொழில் கடன் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் வருகின்ற 20.08.2024 செவ்வாய்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ‘சங்குக் கூடம்”அரங்கில் துவக்கி வைத்து உரையாற்றுவார்கள்.

மேலும், தூத்துக்குடி கிளை அலுவலகத்தில் (முகவரி:- 4/35. என்.பி.எஸ்.காம்ப்ளக்ஸ், போல் பேட்டை, புதிய பேருந்து நிலையம் அருகில், தூத்துக்குடி) குறு, சிறு மற்றும் நடுத்தரத் (ஆளுஆநு) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் எதிர்வரும் 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெறுகிறது.

இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. 

தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகிதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும். மேலும், ஏற்கனவே இயங்கிவரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு விரிவாக்கம் செய்ய நவீன இயந்திரங்கள் நிறுவும்பட்சத்தில் கூடுதலாக 5 சதவிகிதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக விரைவாகவும் எந்தவித தடங்கலுமில்லாமலும் தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களுக்கு நிதியுதவி அளித்து மாவட்ட தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி தமிழ்நாடு தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக மேலும் உருவாக பீடுநடை போட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் தொலைநோக்கு பார்வையாக எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்க வேண்டும் என்பதாகும். அதனை இந்நிறுவனம் பிற அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றி தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்கு இலக்கை அடைய முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும்.

மேலும், இந்நிறுவனம் தனிநபர் நிறுவனங்களுக்கு ரூ.31 கோடி வரை கடன் அனுமதியும், கூட்டு நிறுவனங்களுக்கு ரூ39 கோடி வரை கடன் அனுமதியும், வரையறுக்கப்பட்ட தனி மற்றும் பொது நிறுவனங்களுக்கு ரூ.59 கோடி வரை கடன் அனுமதியும் வழங்கப்படுகிறது.

இந்நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஐஸ் பிளான்ட், பிளை ஆஸ் பிரிக்ஸ், நவீன அரிசி ஆலை, ஆக்டிவேடட் கார்பன், இன்ஜினியரிங் நிறுவனங்கள், கெமிக்கல் தொழிற்சாலைகள், தீப்பெட்டி தொழிற்சாலை, உணவகம், விடுதிகள், சேமிப்புக்கிடங்கு, குளிர்பதன சேமிப்புக் கிடங்கு, வணிக வளாகம் காற்றாலை, சூரிய மின் உற்பத்தி, நடைமுறை மூலதன கடன், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பொருட்கள் வழங்குபவர்/ஒப்பந்தகாரர்களுக்கான பட்டியல் நிதியுதவி திட்டம், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய நிறுவனத்தின் ஒப்பந்தகாரர்களுக்கான பட்டியல் நிதியுதவி திட்டம் கடனுதவி உள்ளிட்டவை வழங்கி வருகிறது.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவிகிதம் சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை நமது மாவட்டத்திலுள்ள புதியதொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகைதந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளைப் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கேட்டுக்கொண்டுள்ளார்.