வீட்டில் உணவு பாதுகாப்பு - தினம் ஒரு தகவல் : பிளாஸ்டிக் முட்டை உண்மையா? பொய்யா?
“முட்டையைக் கீழே போட்டால் பந்து போல பௌன்ஸ் ஆகின்றது… முட்டையைத் தட்டினால் உடையவேமாட்டேன்கின்றது.. முட்டை வாடையே இல்லை….” இவையெல்லாம், ப்ளாஸ்டிக் முட்டை என்ற விவகாரம் ஆரம்பித்த நேரத்தில் உணவு பாதுகாப்புத் துறைக்கு
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களுக்கு நன்றி. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்து தினம் ஒரு தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை செய்தி வடிவில் நாம் வழங்கி வருகிறோம், இன்றைய உணவு பாதுகாப்பு குறித்த தகவலை வாங்க அறிந்து கொள்ளலாம்...
தலைப்பு: முட்டை - பகுதி-4 - பிளாஸ்டிக் முட்டை உண்மையா? பொய்யா?
“முட்டையைக் கீழே போட்டால் பந்து போல பௌன்ஸ் ஆகின்றது… முட்டையைத் தட்டினால் உடையவேமாட்டேன்கின்றது.. முட்டை வாடையே இல்லை….” இவையெல்லாம், ப்ளாஸ்டிக் முட்டை என்ற விவகாரம் ஆரம்பித்த நேரத்தில் உணவு பாதுகாப்புத் துறைக்கு வரப்பெற்ற புகார்களிலிருந்த வாக்கியங்கள்..!!!! இன்று வரை அவ்வப்போது நுகர்வோர் மத்தியில் உயிர்த்தெழும் அச்சமிகு சந்தேகம் ப்ளாஸ்டிக் முட்டை. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலகட்டத்தில், இது வெறும் பொய் பரப்புரை என்று எளிதாகக் கடந்துபோய்விடாமல், பொதுமக்களுக்கு ப்ளாஸ்டிக் முட்டை என்பது கட்டுக்கதை என்ற தெளிவினை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகமும், தமிழநாடு அரசும் தக்க சமயத்தில் வழங்கி, நுகர்வோர்களின் அச்சத்தை அகற்றியது.
எனவே, அச்சத்தை விதைத்த ப்ளாஸ்டிக் முட்டை என்ற கட்டுக்கதை குறித்து இன்று பார்ப்போம்.
1. மனித நுகர்விற்காக ப்ளாஸ்டிக்/போலி முட்டைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
2. கால்சியம் குளோரைடு, சோடியம் அல்ஜினேட், ஜெலட்டின், குளுக்கோலேக்டோன் உள்ளிட்ட வேதிப்பொருட்களினைக் கொண்டு ப்ளாஸ்டிக்/போலி முட்டைகள் வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகின்றன.
2-அ: ஆனால், ஒரு 3D முட்டை ப்ரிண்ட் தயாரிக்க இந்திய மதிப்பில் ரூ.5000 வரை செலவாகும் என்றும், அவ்வளவு செலவு செய்து, ரூ.5-10 வரை அந்த ப்ளாஸ்டிக்/போலி முட்டையை சந்தையில் விற்க வாய்ப்பே இல்லை என்றும் FSSAI உறுதி செய்துள்ளது.
3. மேலே கூறியவாறு வெளிநாடுகளில் செயற்கையாகத் தயாரிக்கப்படும் முட்டை வடிவிலானவை, சினிமா படப்பிடிப்பிற்கும், அலங்காரப் பொருட்களாகவும் தான் பயன்படுத்தப்படுகின்றன.
4. கோழி முட்டையை சரியான வெப்பநிலையில் பாதுகாக்காமல் இருந்தால், கோழி முட்டை ஓட்டில் உள்ள 20000-ற்கும் மேற்பட்ட நுண்துளைகள் வழியே நீர்ச்சத்து ஆவியாகியும், கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறியும் முட்டையின் எடை குறைவதுடன், முட்டை ஓட்டை ஒட்டியுள்ள மெல்லிய சவ்வு, சற்று தடிமனாகும். இதனால், ப்ளாஸ்டிக்/போலி முட்டை என்று சந்தேகிக்கின்றனர்.
Also Read...நாட்டுக்கோழி முட்டையா அல்லது லெக்கான் கோழி முட்டையா? கண்டரிவது எப்படி..?
5. ப்ளாஸ்டிக்/போலி முட்டை என்ற சந்தேகத்தை தீர்ப்பது எப்படி?
5-அ: ஒரு முட்டையை எடுத்து, ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் வைத்தால், கோழி முட்டையின் ஓடு கரைந்துவிடும். மாற்றுவழியாக, வினிகரில் (3-4% அசிட்டிக் ஆசிட் உள்ள வினிகர்) முட்டையை வைத்தால், கோழி முட்டையின் ஓடு மெல்ல கரையும். இந்த இரண்டு சோதனைகளிலும், ப்ளாஸ்டிக்/போலி முட்டையின் ஓடு கரையாது.
5-ஆ: மற்றொரு வழி என்னவென்றால், முட்டையை உடைத்து, ஒரு சமதளமான தளத்தில்/பாத்திரத்தில் ஊற்றி கவனியுங்கள். கோழி் முட்டையின் மஞ்சள் கரு, வெள்ளைக் கருவுடன் கலக்காமல் தனியாக இருக்கும். அவை ஒன்றுடன் ஒன்று கலப்பதற்கு சற்று நேரம் ஆகும். முட்டை வாடை உறுதியாக இருக்கும். செயற்கையாக தயாரிக்கப்பட்ட முட்டையை உடைத்து ஊற்றிய உடன், மஞ்சள் கரு, வெள்ளைக்கருவுடன், ஒன்றுடன் ஒன்றாகக் கலந்துவிடும். முட்டையின் வாடையும் இராது.
எனவே, ப்ளாஸ்டிக்/போலி முட்டை என்ற பயத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, முழு மனத்திருப்தியுடன் தினம் அரைமுட்டையாவது நாம் சாப்பிடுவோம்…!!!!
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் பாதுகாப்பானதா? நாளை பார்ப்போம்…!
நன்றி:டாக்டர்.ச.மாரியப்பன், எம்.பி.பி.எஸ்., எம்.பி.எச்.,
நியமன அலுவலர்,உணவு பாதுகாப்புத் துறை,
தூத்துக்குடி மாவட்டம்.
For complaints: 9444042322.
++++++++++++++++++++++
வாட்ஸ் ஆப் மூலம் தினசரி தகவலை அறிந்து கொள்ள இணைந்திருங்கள்...