பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர் பலி – ரூ.30 லட்சம் இழப்பீடு, அரசு வேலை பரிந்துரை மேயர் ஜெகன் உறுதி..!

பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர் பலி – ரூ.30 லட்சம் இழப்பீடு, அரசு வேலை பரிந்துரை மேயர் ஜெகன் உறுதி..!

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்ததாரர் மூலம் தூய்மை பணியாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த நெல்லை மாவட்டம் பருத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், புதன்கிழமை அன்று தூத்துக்குடி மனோராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை மோட்டார் புகைப்படம் எடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விஷவாயு தாக்கத்தால் உயிரிழந்தார்.

 அவருடன் பணியாற்றிய மேலும் ஒரு தொழிலாளர் விஷவாயு தாக்கத்தால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வியாழக்கிழமை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இறந்த ராஜ்குமாரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதை தொடர்ந்து மாநகராட்சி மேயர் , மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, காவல் ஆய்வாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் K. காசி, சிஐடியு மாவட்ட தலைவர் R. பேச்சிமுத்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க கிளைச் செயலாளர் இல. இராமமூர்த்தி, தமிழக ஆட்சிக் கழகத்தின் நிறுவனர் எஸ்.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிபி எம் , தூத்துக்குடி மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து ,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் தாமோதரன், மாவட்ட இணைச் செயலாளர் B. நாகராஜன், உள்ளிட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள் என பலர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில், உயிரிழந்த திரு. ராஜ்குமார் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு மற்றும் ரூ.2 லட்சம் இறுதி நிகழ்ச்சி செலவிற்காக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், குடியிருப்பு மனைப்பட்டா வழங்கி வீடு கட்டிக் கொடுத்தல் மற்றும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, இந்த உயிரிழப்பு சம்பவத்தை அரசு கவனத்திற்கு கொண்டு சென்று அரசு வேலை மற்றும் வீடு கட்டி வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதன் பின்னர் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

இந்த துயரச் சம்பவம் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு, பணிச்சூழல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து மீண்டும் ஒரு முறை சமூக கவனத்தை திருப்பியுள்ளது.