28 மூலிகைகள் கலந்த காஷ்மீர் காவா டீ: தூத்துக்குடியில் ஆரோக்கிய பானத்திற்கு பெரும் வரவேற்பு!

28 மூலிகைகள் கலந்த காஷ்மீர் காவா டீ: தூத்துக்குடியில் ஆரோக்கிய பானத்திற்கு பெரும் வரவேற்பு!

காஷ்மீரில் பாரம்பரியமாக அருந்தப்படும் இயற்கை மூலிகைகள் நிறைந்த ‘காஷ்மீர் காவா டீ’ தற்போது தூத்துக்குடி மாநகரில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.

தூத்துக்குடி சிதம்பர நகர் மேற்கு பகுதியில், சக்தி விநாயகா பள்ளி எதிரே அமைந்துள்ள கடையில், பக்கீல் புரத்தைச் சேர்ந்த யூசுப் செரிப் இந்த பாரம்பரிய பானத்தை விற்பனை செய்து வருகிறார். இந்த கடை தினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.

இந்த காவா டீயில் 28 வகையான இயற்கை மூலிகைகள் மற்றும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பெரிய சீரகம், சின்ன சீரகம், கருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சுக்கு, மல்லி, மிளகு, முருங்கைக்கீரை, முந்திரி, பாதாம், பேரிச்சம் பழம், காய்ந்த திராட்சை, சியா விதை, சூரியகாந்தி விதை, பூசணி விதை, எள்ளு, கொள்ளு, கருப்பு உளுந்து, அத்திப்பழம், குங்குமப்பூ, காய்ந்த நெல்லி, தேன், நாட்டு ரோஜா உள்ளிட்ட பல இயற்கை பொருட்கள் இதில் அடங்கும்.

காஷ்மீரில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘கூஜா’ என்ற பாரம்பரிய பாத்திரத்தில் இந்த டீ தயாரிக்கப்படுவது இதன் சிறப்பாகும். காஷ்மீரில் ரூ.70க்கு விற்பனை செய்யப்படும் இந்த டீ, தூத்துக்குடியில் ரூ.30க்கு வழங்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் பல இயற்கை பொருட்கள் தமிழகத்திலேயே கிடைப்பதால் விலை குறைவாக இருப்பதாக வியாபாரி தெரிவிக்கிறார்.

இதுகுறித்து யூசுப் செரிப் கூறுகையில்,

“இது முழுமையாக கெமிக்கல் இல்லாத இயற்கை பானம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது” என்றார்.

குறிப்பு: இந்த செய்தி மக்கள் கெமிக்கல் கலந்த செயற்கை பானங்களை தவிர்த்து, இயற்கை மூலிகைகள் அடங்கிய ஆரோக்கியமான பானங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு வெளியிடப்படுகிறது.