தூத்துக்குடியில் ரூ.77.87 லட்சம் மதிப்பீட்டில் குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா!
தூத்துக்குடியின் நகரதந்தை என மக்களால் போற்றப்படும் ஐயா ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு ரூ.77.87 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்க தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடியின் நகரதந்தை என மக்களால் போற்றப்படும் ஐயா ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு ரூ.77.87 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்க தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909முதல் ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டு தூத்துக்குடி நகரில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர். தூத்துக்குடி நகரமக்கள் சுகாதாரமற்ற கிணற்றுநீரை குடிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தி வந்தனர். இதன் காரணமாக காலரா, பிளேக் போன்ற கொடிய நோய்களால் பலர் உயிர் இழந்தனர். ஏராளமானோர் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகினர். மேலும் குடிநீர் பஞ்சம் பெரும் பிரச்சனையாக இருந்தது.
தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு குரூஸ் பர்னாந்தீஸ் இலங்கையில் கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் குடிநீர் கொண்டு வந்தார். ஆனாலும் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்ய முடியவில்லை. பின்னர் கடம்பூரிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதுவும் போதுமானதாக இல்லை. கோரம்பள்ளம் குளத்திலிருந்து கால்வாய் மூலம் குடிநீர் கொண்டு வந்து நகரின் பல்வேறு இடங்களில் வட்டத்தெப்பம், வட்டக்கிணறுகள், மூடிக்கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஆயினும் இதுவும் பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு போதுமானதாக இல்லை.
கடற்கரை நகரமான தூத்துக்குடி நகர மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண 24மைல் தூரமுள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கிணறுகள் தோண்டி வல்லநாட்டில் சுத்திக்கரிப்பு செய்து பெரிய குழாய்கள் மூலம் தூத்துக்குடி நகரத்திற்கு கொண்டு வந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக செயல்படுத்தினார். இதன் காரணமாக இன்றளவும் தூத்துக்குடி நகர மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டதற்கு குரூஸ்பர்னாந்தீஸ எடுத்த சீறிய முயற்சிதான் காரணமாகும். இவர் ராவ் பகதூர் என்ற பட்டம் பெற்றவர் ஆவார்.
இன்று தூத்துக்குடி மாபெரும் மாநகரமாவதற்கு குரூஸ் பர்னாந்தீஸ் தான் காரணம். ஆதலால் தூத்துக்குடி மக்களின் தந்தை என போற்றப்படுகிறார். தூத்துக்குடி நகர மக்களின் பெரும் மதிப்பை பெற்ற குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் பிறந்தநாள் விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று தூத்துக்குடி மாநகரில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்க்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வரால் கடந்த 13.11.2021 அன்று அறிவிக்கப்பட்டு. பின்னர், ரூ.77,87,343 நிதி வழங்கி ஆணையிடப்பட்டது.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டி தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவாக்ளின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகரத் தந்தை என போற்றப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு ரூ.77,87,343/- மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது. தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவிற்கு கீழ்ப்புறம் 376.60 சதுர அடி பரப்பில் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மண்டபமும், மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பேவர் பிளாக், புல்வெளி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் திருமதி.தி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்க்கண்டேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி.அ.பிரம்மசக்தி, மாநகராட்சி துணை மேயர் திருமதி.ஜெனிட்டா செல்வராஜ், ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் நலச்சங்கத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
++++++++++++++++++++++++++++
தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் செய்திகள் முதல் உலகம் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News, Thoothukudi news,), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் டூட்டி விஷன் நியூஸ் (www.tutyvision.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Whatsapp Group: Click Here...