வீட்டில் உணவு பாதுகாப்பு - தினம் ஒரு தகவல்: வனஸ்பதி!
வீட்டில் உணவு பாதுகாப்பு - தினம் ஒரு தகவல்: வனஸ்பதி!
மருத்துவக் கல்லூரி முடிந்து, சில மாதங்கள் கேரளாவின் திருச்சூரில் இருக்க நேர்ந்தது. அந்த சமயத்தில், சான்றிதழ்களை நகல் எடுக்க, நானும் எனது நண்பனும், திருச்சூரில் மூன்று முக்கிய வணிக தெருக்களில் “ஜெராக்ஸ்” (Xerox) கடை தேடி அலைந்தோம். ‘ஜெராக்ஸ் கடை’ எங்குள்ளது என்று பலரிடமும் விசாரித்தும் பலனில்லை. இறுதியில் ஒரு கடைக்காரர், “எந்த தான் வேணும்?” என்று கேட்க, நாங்களும், சான்றிதழ்களைக் காண்பித்து, “ஜெராக்ஸ் காப்பி… காப்பி… எவ்விட..?” என்று கேட்ட உடனே, அவர், “ஓ.. ஃபோட்டோகாப்பியோ..!” என்று வியப்பாகிய பின்னர், கடை இருக்கும் இடத்தினை கூறினார். அதன் பின்புதான் தெரியவந்தது, ஜெராக்ஸ் என்பது நகலெடுக்கும் இயந்திரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயர் என்று..!! அதுபோல, அடையாளம் மாற்றி அறியப்படும் பொருள் தான் நமது இன்றைய தலைப்பு..! வீட்டு விழாக்களின் விருந்திற்கான உணவு தயாரிக்க, சமையல் மாஸ்டரின் சிட்டையில் இப்பொருள் தவறாது இடம்
பெற்றிருக்கும். ஆனால், அப்பொருளின் உண்மைப் பெயரினை, அதன் ப்ராண்ட் பெயர் மறைத்துவிட்டது. ஆம், “வனஸ்பதி” என்றால், வைவாவில் (Viva) பதில் தெரியாமல் தலையைச் சொறியும் மாணவன் போலத்தான் நம்மில் பலபேர் இருப்போம்..! ஆனால், “டால்டா” என்றால் யாரும் தெரியாது என்று சொல்ல வாய்ப்பில்லை..!
அவ்வாறு, டால்டா என்ற ப்ராண்ட் பெயரில் பிரபலமான வனஸ்பதி என்ற உணவுப் பொருள் குறித்து தான் இன்று பார்க்கப்போகின்றோம்.
1. வனஸ்பதி என்பது, பாமாயில், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்ட FSSAI-ல் அங்கீகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜனேற்றம் (Fully or Partial Hydrogenation) செய்து தயாரிக்கப்படுவது. நமது நாட்டில், பாமாயிலில் தான் அதிகமாக வனஸ்பதி தயாரிக்கப்படுகின்றது. பல்வேறு தாவர எண்ணெய்களின் கலவையிலிருந்தும் வனஸ்பதி தயாரிக்கப்படுகின்றது.
2. இதன் மற்றொரு பொதுப் பெயர், “தாவர நெய்” என்பதாகும்.
3. வனஸ்பதி தயாரிப்பில் அர்ஜிமோன் எண்ணெய் (Argimone Oil), விளக்கெண்ணெய் (Castor Oil) சேர்க்க அனுமதியில்லை.
4. வனஸ்பதியுடன் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நறுமணங்களைச் சேர்க்கக்கூடாது. மேலும், செயற்கை வெண்ணெய் நறுமணத்தையும் சேர்க்கக்கூடாது என்பது FSSAI-ன் விதி.
5. வனஸ்பதியில், நெய் போன்று தோற்றமளிக்கும் வண்ணம் உள்ளிட்ட எந்த வகை வண்ணங்களையும் சேர்க்கக்கூடாது என்பதும் FSSAI-ன் விதி.
6. வனஸ்பதியை சூடுபடுத்தினால், தெளிந்த தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதுடன், மனதிற்குகந்த வாசனை மற்றும் சுவை இருக்க வேண்டும். ஆனால், கெட்டுப்போன பொருளின் வாடை வரக்கூடாது.
7. வனஸ்பதியில் ட்ரான்ஸ் ஃபேட்டி ஆசிட் 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பதும் FSSAI-ன் விதி.
வனஸ்பதியின் ஊட்டச்சத்து விபரம், பாதிப்புகள், அதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நிக்கல் (Nickel) என்ற வேதிப்பொருளினால் பாதிப்பு உள்ளதா? வனஸ்பதியை வழக்கமான உணவில் சேர்க்கலாமா?…
8. வனஸ்பதி தயாரிப்பில் குங்கிலியம் எண்ணெய் (அ) கொழுப்பு (Sal seed oil/fat) 10 சதவீதத்திற்கு மேல் சேர்க்கக்கூடாது.
9. வனஸ்பதி தயாரிப்பில் ஹைட்ரஜனேற்றம் செய்வதற்கு, வினையூக்கியாக நிக்கல் (Nickel) என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகின்றது. தயாரிப்பின் இறுதியில் கிடைக்கும் வனஸ்பதியில், நிக்கல் 1.5ppm-ற்கு (1.5mg/kg) மிகாமல் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.
10. வனஸ்பதியை காற்றுப்புகா உணவுத் தரக் கொள்கலனில் அதிக வெளிச்சமில்லாத, குளிரான பகுதியில் இருப்பு வைக்க வேண்டும். வனஸ்பதியின் நிறம் மற்றும் மணம் மாறியிருந்தால், அதனைப் பயன்படுத்தக் கூடாது.
11. 100 கிராம் வனஸ்பதியில் 900 Kcal உள்ளது. நிறைவுற்ற கொழுப்பு 48-60 கிராம் உள்ளது. மோனோ-அன்சேச்சுரேட ட் ஃபேட்டி ஆசிட் 30-48 கிராம் (நிறுவனத்திற்கு நிறுவனம் இது மாறுபடுகின்றது) உள்ளது.
12. ஏழைகளின் நெய் என்று கருதப்படும் வனஸ்பதியில், வைட்டமின்-ஏ மற்றும் ‘டி’ ஆகியவை செறிவூட்டப்படுகின்றது.
13. வனஸ்பதியில், “ஸ்டீரின்” (Stearin) கலப்படம் நடக்க வாய்ப்புள்ளது. அதனை பகுப்பாய்வில்தான் கண்டறிய இயலும்.
14. வனஸ்பதியில் உள்ள அதிகமான நிறைவுற்ற கொழுப்பினால், இதய நோய் பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், வனஸ்பதியில் உள்ள ட்ரான்ஸ் ஃபேட்டி ஆசிட் நீரிழிவு நோய்க்கும், மார்பக புற்றுநோய்க்கும் ஒரு ஆபத்து காரணியாக உள்ளது.
15. வனஸ்பதி தயாரிப்பில் பயன்படுத்தும் ‘நிக்கல்’, தயாரிப்பின் இறுதியில் கிடைக்கும் வனஸ்பதியில் வரையறுக்கப்பட்ட அளவினைவிட அதிகமாகி, அதனை நாம் தொடர்ந்து எடுத்துவந்தால், சிறுநீரகம் மற்றும் வயிற்று பாதிப்பு ஏற்படலாம்.
வனஸ்பதியை தினமும் உணவில் சேர்க்க வேண்டியதில்லை. ஆனால், வனஸ்பதியில் வைட்டமின்-ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டுள்ளதின் காரணத்தினால், அவ்வப்போது அனுமதிக்கப்பட்ட தினசரி கொழுப்புத் தேவைக்குள் வனஸ்பதியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, வனஸ்பதியை சமையலில் சேர்க்கும் நாளில், இதர உணவு எண்ணெய்களையும், கொழுப்பு வகை உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும் அல்லது மிகவும் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், வனஸ்பதியை உள்ளீட்டுப் பொருளாகக் கொண்டுள்ள பொட்டலமிடப்பட்டுள்ள நொறுக்குத்தீனிகளையும் மிக மிகக் குறைவாக, அதாவது சுவைக்காக எடுத்துக்கொள்ள வேண்டுமேயொழிய, தினசரி உணவாகிவிடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்வோமாக..!
நாளை மைதா குறித்து பார்ப்போம்..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி:டாக்டர்.ச.மாரியப்பன், எம்.பி.பி.எஸ்., எம்.பி.எச்.,
நியமன அலுவலர்,உணவு பாதுகாப்புத் துறை,
தூத்துக்குடி மாவட்டம்.
For complaints: 9444042322
++++++++++++++++++++++