தூத்துக்குடி வழக்கறிஞர் கொலையில் முக்கிய குற்றவாளி மும்பையில் கைது!

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி மும்பையில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலையில் முக்கிய குற்றவாளி மும்பையில் கைது!

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி மும்பையில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருடைய மகன் முத்துக்குமார் (45). வழக்கறிஞர். இவர் கடந்த 23-ந் தேதி சோரீஸ்புரத்தில் உள்ள தனது அடகு கடைக்கு சென்றபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த வேல்முருகன் (25), ராஜரத்தினம் (25), இலங்கேஸ்வரன் (30), முத்துராஜ், ரமேஷ் ஆகிய 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்களில் வேல்முருகன், ராஜரத்தினம், இலங்கேசுவரன் ஆகிய 3 பேரையும் சிப்காட் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதற்கிடையே போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் 3 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு கொலை சம்பவம் நடந்த விதத்தை 3 பேரும் நடித்து காண்பித்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி மும்பையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் மும்பைக்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த ஆறுமுகநேரியை சேர்ந்த பாஸ்கர் (29) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை நேற்று தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.