வீட்டில் உணவு பாதுகாப்பு - தினம் ஒரு தகவல் : வீட்டில் உபயோகிக்கபடும் எண்ணெய்கள் பற்றி நாம் இதுவரை அறிந்திடாத பல உண்மைகள்!

வீட்டில் உணவு பாதுகாப்பு - தினம் ஒரு தகவல் : வீட்டில் உபயோகிக்கபடும் எண்ணெய்கள் பற்றி நாம் இதுவரை அறிந்திடாத பல உண்மைகள்!

வீட்டில் உணவு பாதுகாப்பு - தினம் ஒரு தகவல் : வீட்டில் உபயோகிக்கபடும் எண்ணெய்கள் பற்றி நாம் இதுவரை அறிந்திடாத பல உண்மைகள்!

வீட்டில் உணவு பாதுகாப்பு - தினம் ஒரு தகவல் : வீட்டில் உபயோகிக்கபடும் எண்ணெய்கள் பற்றி நாம் இதுவரை அறிந்திடாத பல உண்மைகள்!

என்ன வேணும்?.. எண்ணதான் வேணும்..! என்று ஆரம்பித்து, இது நல்லெண்ணெய் தான…?! என்று முடியும் வடிவேலுவின் நகைச்சுவையை யாரும் மறந்துவிட முடியாது. டாக்டரிடமும், எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்? என்று கேட்கின்ற கேள்வி இன்னும் தொடர்ந்தவண்ணம் உள்ளது. ஆனால், அந்த எண்ணெயை் பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தத் தவறுகின்றோம். அதேவேளையில், மினரல் ஆயில் கலப்படம், எசன்ஸ் கலப்படம் என்று சில பரப்புரைகளில் எளிதில் மயங்கிவிடுகின்றோம். அந்த உணவு எண்ணெயின் முக்கியத்துவம் குறித்துதான், இன்று முதல் பார்க்கப்போகின்றோம்.

# FSSAI-ல் அங்கீகரிக்கப்பட்ட உணவு எண்ணெய்கள்:

1. கடலை எண்ணெய்

2. தேங்காய் எண்ணெய்

3. நல்லெண்ணெய்

4. கடுகு எண்ணெய்

5. சூரியகாந்தி எண்ணெய்

6. பாமாயில்

7. ஆலிவ் ஆயில்

8. சாஃப்ளவர் எண்ணெய் (Safflower Oil)

9. சோள எண்ணெய் (Corn Oil)

10. ரைஸ் பிரான் ஆயில்

11. இலுப்பை எண்ணெய்

12. பருத்திக்கொட்டை எண்ணெய்

13. தண்ணீர்பழ விதை எண்ணெய் (watermelon seed oil)

14. பேய் எள்ளு எண்ணெய் (Niger seed Oil)

15. ஆளி எண்ணெய் (Linseed Oil)

16. சோயாபீன் எண்ணெய்

17. கசகசா எண்ணெய் (Poppy seed Oil)

18. கார முட்டைக்கோஸ் கீரை விதை எண்ணெய் (Taramira Seed Oil)

19. குங்கிலியம் விதை கொழுப்பு (Sal Seed Fat)

20. மாம்பருப்பு கொழுப்பு (Mango Kernel Fat)

21. முருகல் கொழுப்பு (Kokum Fat)

22. தூப மர விதை கொழுப்பு (Dhupa Fat)

23. Phulwara Fat

24. Avacoda oil

25. பாதாம் எண்ணெய் (Almond Oil)

மேலே கூறியவற்றைத் தவிர, வேறு எந்த வகை எண்ணெயையும் உணவு எண்ணெயாகப் பயன்படுத்தக்கூடாது.

2. மேற்கூறிய எண்ணெய்களைக் கலவையாக்கி, “Muti-Sourced Edible Oil” என்று விற்பனை செய்யலாம். (கடுகு எண்ணெயுடன் மட்டும் வேறு எண்ணெய் சேர்க்கக்கூடாது.)

3. பாமாயில் தடைசெய்யப்பட்டது அல்ல.

உணவு எண்ணெயை எப்படி வாங்க வேண்டும், எப்படி பாதுகாக்க வேண்டும், எத்தனை முறை பயன்படுத்தலாம் என்பது குறித்த தகவல் 

செக்கு எண்ணெய் என்று கூவிக்கொண்டு வியாபாரி ஒருவர் உங்கள் வீட்டிற்கே வந்து, உங்களிடம், மிகவும் குறிப்பாக இல்லத்தரசிகளிடம் நயமாக பேசி, மேற்படி எண்ணெயை விற்றுவிட்டுச் சென்றுவிடுவார். ஆனால், நீங்கள் வாங்கியது, உண்மையில் செக்கு எண்ணெய் தானா அல்லது கலப்படமில்லாத தரமான எண்ணெய் தானா என்பதிற்கு உத்திரவாதம் இல்லை. ஏனென்றால், நமது மாநிலத்தில் சில இடங்களில் அந்த வகையான மோசடியைக் கண்டறிந்து, உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்பதுடன், அத்தகைய குற்றம் நடக்காவண்ணம் தொடர் கண்காணிப்பினையும் மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், நாம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பதால், எண்ணெயை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை குறித்தும், எண்ணெயை பாதுகாப்பாக இருப்பு வைப்பது குறித்தும் இன்று பார்க்கலாம்.

1. பானையின்/டின்னின் மூலம்  சில்லறை விற்பனை (loose oil sale) அடிப்படையில், நடமாடும் வியாபாரிகளால் விற்கப்படும் எண்ணெயை வாங்கக்கூடாது.

2. லேபிள் இல்லாமல் பாட்டிலில் அடைத்து, செக்கு எண்ணெய் என்ற பெயரில் விற்கப்படும் எண்ணெயையும் வாங்கக்கூடாது.

3. முந்தைய பதிவுகளில் தெரிவித்துள்ளவாறு, FSSAI உரிமம் உள்ளிட்ட முழு லேபிள் விபரங்களுடன், பாட்டிலில் அடைத்து, விற்கப்படும், எந்த உணவு எண்ணெயாக இருந்தாலும், அதனை வாங்கிப் பயன்படுத்தலாம். செக்கு எண்ணெய் பாட்டிலாக/பொட்டலமாக இருந்தாலும், லேபிள் அவசியம்.

4. சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால், திறந்தநிலையிலும், அடுப்பின் அருகிலும் உணவு எண்ணெயை இருப்பு வைக்கக்கூடாது.

5. சிலிண்டர் போன்று எளிதில் தீ பிடிக்கும் உபகரணங்கள் அருகில் எண்ணெயை வைக்கக்கூடாது.

6. அவசரகதியில் உணவு எண்ணெய் என்று நினைத்து, திரவ வேதிப்பொருட்களை சமையலுக்குப் பயன்படுத்திய நிகழ்வுகள் பதிவாகியுள்ளது என்பதால், வேதிப்பொருட்களின் அருகே, மிகவும் குறிப்பாக, திரவ நிலை வேதிப்பொருட்களின் அருகே உணவு எண்ணெயை இருப்பு வைக்கக்கூடாது.

உணவு எண்ணெயை எத்தனை முறை பயன்படுத்தலாம் என்பது குறித்தும், கலப்பட எண்ணெய் குறித்தும் தகவல் 

செலவைக் குறைப்பாதாகக் கருதியும், உணவுப் பொருட்களை வீண்டிக்கக்கூடாது என்று கருதியும், நம்மில் சில வீடுகளில் எண்ணெய் தீய்ந்து கருப்பாக மாறும் வரை பயன்படுத்துவோம். ஆனால், உணவு எண்ணெயை அதிகம் பயன்படுத்தும் போது வரும் நோய்களைவிட, எண்ணெயைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்தி பயன்படுத்துவதால் தான் நோய்தாக்கம் அதிகரிக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கத் தவறிவிட்டோம். எனவே, உணவு எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், அதன் மறுசுழற்சி முறை குறித்தும், பாதுகாப்பாக அப்புறப்படுத்துதல் குறித்தும் இன்று பார்க்கலாம்.

1. உணவு எண்ணெயை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். அதாவது, ஒரே வகை உணவு எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தாமல், மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

2. ஒரு நாளைக்கு ஒரு நபர் 4 தேக்கரண்டிகளுக்கு மிகாமல் உணவு எண்ணெயை எடுத்துக்கொள்ளலாம்.

3. ஒருமுறை பயன்படுத்தி மீதமான எண்ணெயை, அதிகபட்சம் இரண்டு முறைக்கு மேல் திரும்ப சூடுபடுத்தி் பயன்படுத்தக்கூடாது என்றிருந்தாலும், “எண்ணெயை ஒருமுறை மட்டும் பயன்படுத்துவதான் உடல் நலத்திற்குச் சிறந்தது”.

4. பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினால், எண்ணெயில் “Total Polar Compounds” என்ற கெட்ட கொழுப்புகள் அதிகரித்து, இரத்தநாளத்தில் கொழுப்பு படிமம் ஏற்பட்டு, அத்திரோஸ்கிலிரோஸிஸ், இதய நோய், இரத்தக்கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் உருவாகும்.

5. அதிக வெப்பநிலையில் மீண்டும் மீண்டும் உணவு எண்ணெயை சூடுபடுத்திடும் போது, “அக்ரிலமைடு” என்ற புற்றுநோய் காரணி உருவாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, பொறிப்பதற்காக உணவு எண்ணெயை ஒருமுறை மட்டும் பயன்படுத்துவது சிறந்தது.

6. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பப் பயன்படுத்த நேரிட்டால், அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்திடல் வேண்டும்.

7. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பப் பயன்படுத்த நேரிட்டால், அதனை வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும்.

8. ஒருமுறை அப்பளம், சிக்கன் போன்ற உணவுகளைப் பொறிப்பதற்கு பயன்படுத்திய எண்ணெயை, மறுமுறை பயன்படுத்த நேரிட்டால், அதனை கூட்டு, குழம்பு போன்றவற்றை சமைக்கப் பயன்படுத்தலாம். மறுபடியும் பொறிக்கப் பயன்படுத்தக்கூடாது.

9. எண்ணெய் சூடுபடுத்தும் போது, சாம்பல்நீல நிறத்தில் புகை வந்தாலோ, அடரத்தியான நுரை வந்தாலோ, எண்ணெய் கருத்துவிட்டாலோ அதனைப் பயன்படுத்தக்கூடாது.

10. பயன்படுத்திய எண்ணெயுடன் புதிய எண்ணெயை சேர்த்து இருப்பு வைக்கவோ அல்லது அடுப்பில் சூடாக இருக்கும் புதிய எண்ணெயுடன் மேலும் புதிய எண்ணெயை சேர்க்கவொ அல்லது பழைய பயன்படுத்திய எண்ணெயை சேர்க்கவோ கூடாது.

11. பயன்படுத்தி மீதமான எண்ணெயை, தனியாக இருப்பு வைத்து, பயோடீசல் தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்றுவிடலாம். அதற்கென்று, அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ஸிகள் உள்ளன. பயன்படுத்தி மீதமான எண்ணெயை லிட்டர் ரூ.40-60 வரை எடுத்துக்கொள்வார்கள்.

12. பயன்படுத்திய எண்ணெய் மிகவும் குறைவாகத்தான் மீதமாகின்றது எனில், அதனை கழிவுநீர் வாய்க்காலில் கொட்டாமல், மணல் அல்லது காகிதம்/டிஸ்யூ பேப்பர் ஆகியவற்றுடன் கலந்து, குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும்.

 

மினரல் ஆயில் கலப்படம் உண்மையா? பொய்யா?… நாளை பார்ப்போம்.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நன்றி:டாக்டர்.ச.மாரியப்பன், எம்.பி.பி.எஸ்., எம்.பி.எச்.,

நியமன அலுவலர்,உணவு பாதுகாப்புத் துறை,

தூத்துக்குடி மாவட்டம்.

For complaints: 9444042322.
++++++++++++++++++++++