தூத்துக்குடி–மதுரை நான்கு வழிச்சாலையில் பயங்கர விபத்து மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் அரசு அலுவலக உதவியாளர் பலி!

தூத்துக்குடி–மதுரை நான்கு வழிச்சாலையில் பயங்கர விபத்து  மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் அரசு அலுவலக உதவியாளர் பலி!

தூத்துக்குடி:
தூத்துக்குடி–மதுரை நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், கோவில்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த 47 வயதான முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓட்டப்பிடாரம் அருகே கொல்லங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த முருகன், கடந்த சில ஆண்டுகளாக வடக்கு பரம்பூர் பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி பழனியம்மாள் எஸ்.கைலாசபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு சுகாதாரப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வீர ஆனந்தராஜ், வீரமுத்து என இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தபால்களைப் பெற்றுக்கொண்டு, முருகன் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டியை நோக்கி சென்றுள்ளார்.

எப்போதும்வென்றான் அருகே பசுவந்தனை விலக்கு பகுதியில் சென்றபோது, எதிர்திசையில் இருந்து நான்கு வழிச்சாலைக்கு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் பலத்த காயமடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் லாரி ஓட்டுநர், கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (39) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் வடக்கு பரம்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.