குலசை தசரா விழாவில் சினிமா பிரபலங்களுக்கு தடை! கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

குலசை தசரா விழாவில் சினிமா பிரபலங்களுக்கு தடை! கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவில் சினிமா பிரபலங்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா, தமிழகத்தின் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்த ஆண்டு தசரா விழா அக்டோபர் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து காளி, அம்மன், ராஜா, ராணி, அரசர்கள், குரங்கு உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

தசரா குழுவினர் மேள, தாளங்களுடன் ஊர்வலமாக செல்லும் நிலையில், சில குழுக்களால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகளை அழைத்து வந்து நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு தசரா விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, குலசேகரன்பட்டினம் தசரா விழாவிற்கு சினிமா பிரபலங்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. இதனை மீறி சினிமா பிரபலங்களை அழைத்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விழாவிற்கு உலோக ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது என்றும், ஜாதி அடையாளங்களுடன் பக்தர்கள் வருகை தரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தசரா விழா நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் விழா ஒழுங்குமுறையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.